Enable Javscript for better performance
போலீஸாரால் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: தெலங்கானா அரசுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸாரால் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: தெலங்கானா அரசுக்கு நோட்டீஸ்

    By dn  |   Published on : 17th April 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெலங்கானாவில் போலீஸாரால் விசாரணைக் கைதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக வரும் 23-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு அந்த மாநில அரசுக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

    பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 5 பேரை விசாரணைக் கைதிகளாக தெலங்கானா போலீஸார் வாரங்கல் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்களை கடந்த 7-ஆம் தேதி போலீஸார் அழைத்து வந்தனர். அப்போது தங்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துவிட்டு தப்பியோட முயன்றதாகக் கூறி போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றனர்.

    இதுதொடர்பாக, சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான விகார் அகமது என்பவரின் தந்தை முகமது அகமது ஹைதராபாத் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.

    அதில், போலீஸ் காவலில் வைத்து 5 பேரை சுட்டுக் கொன்ற போலீஸார் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரகுநாத் முன்வைத்த வாதம்:

    சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள், அவசர கதியில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. எனவே, மீண்டும் அந்த உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

    அதையடுத்து, இதுதொடர்பாக வரும் 23-ஆம் தேதிக்குள் தெலங்கானா அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai