Enable Javscript for better performance
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கொலை மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    
    raghuram_rajan

    ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் பெயரில் மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் வந்துள்ளது.

    இதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? என கண்டுபிடிக்க மும்பை போலீஸார் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

    எனினும், இந்தக் கொலை மிரட்டல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அலுவலகம் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

    இதுகுறித்து மும்பை காவல் துறை செய்தித் தொடர்பாளர் தனஞ்சய் குல்கர்னி, வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    அந்த மின்னஞ்சல், கவர்னர் அலுவலகத்துக்கு 20-25 நாள்களுக்கு முன்பு வந்துள்ளது.

    போலி இணைய அடையாள முகவரி மூலம், இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

    இதுபோன்று மிரட்டல்களை அனுப்புவதில் கை தேர்ந்த, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சிலர், இதைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    அந்த மின்னனஞ்சலை அனுப்பியவர் பற்றிய விவரங்களைக் கண்டுபிடிக்குமாறு "ஜி மெயில்' அலுவலக அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர்கள் ஒரு வாரத்தில் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் தனஞ்சய் குல்கர்னி.

    அந்த மின்னஞ்சலில் உள்ள விவரங்களை போலீஸார் விரிவாகத் தெரிவிக்கவில்லை.

    இதுதொடர்பாக, போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

    "ரகுராம் ராஜனைக் கொலை செய்வதற்கு பேரம் பேசப்பட்டுள்ளதால், அதன்படி, அவர் கொலை செய்யப்படுவார்.

    ஒருவேளை, பேரம் பேசப்பட்ட தொகையைவிட, அதிகமான தொகையை ரகுராம் ராஜன் கொடுத்தால், அவரைக் கொலை செய்யாமல் இருப்பது குறித்து பரிசீலிக்கப்படும்' என அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், அந்த மின்னஞ்சல் கணக்கு, ஒரு சில நாட்களிலேயே, ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, நைஜீரியா, போலந்து, பெல்ஜியம், ஹாங்காங், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பயன்படுத்தப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பாதுகாப்பு அதிகரிப்பு: இதையடுத்து, ரகுராம் ராஜனுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில உள்துறையின் கூடுதல் தலைமைச் செயலர் கே.பி.பக்ஷி கூறினார்.

    வாஷிங்டனில் ரகுராம் ராஜன்: இந்நிலையில், உலக வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன், வாஷிங்டனுக்குச் சென்றுள்ளார்.

    இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பைச் சேர்ந்தவர்கள், சிரியா, இராக் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான அரசை நிறுவுவதற்காக, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai