Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு ரூ.506 கோடி நிவாரணம்: உ.பி. அரசுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளுக்கு ரூ.506 கோடி நிவாரணம்: உ.பி. அரசுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்

    By dn  |   Published on : 17th April 2015 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rajnath_singh

    பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.506 கோடி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் பருவம் தவறிய மழையாலும், ஆலங்கட்டி மழையாலும் 113 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக சில விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்நிலையில், பயிர்ச் சேதமடைந்த சில பகுதிகளை ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரைப் போக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    இந்த விவகாரத்தை அரசியல் ஆதாயத்துடன் அணுகக் கூடாது. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து மாநில அரசைக் குறை கூற நான் இங்கு வரவில்லை. விவசாயிகள் நலனுக்காக அனைவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என்றே அரசியல் கட்சிகள் உள்பட அனைவரிடமும் வலியுறுத்துகிறேன்.

    விவசாயிகள் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    50 சதவீதப் பயிர்கள் சேதமடைந்திருந்தால் மட்டுமே நிவாரணம் வழங்க முடியும் என்ற விதியைத் தளர்த்தி, 33 சதவீதப் பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால்கூட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    விவசாயிகள் தற்கொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவர்களது பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.506 கோடி நிவாரணத் தொகையை மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai