சுடச்சுட

  

  கங்கைக் கரையில் திருவள்ளுவர் சிலை:சென்னையில் 27-இல் ஒப்படைப்பு விழா

  By புது தில்லி,  |   Published on : 23rd August 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  thiruvalluvargray

  உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக் கரையில் நிறுவுவதற்காக, மாமல்லபுரத்தில் தயாராகி வரும் திருவள்ளுவர் சிலை ஒப்படைப்பு விழா சென்னையில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

  தமிழ் மொழியின் மீது ஆர்வம் உள்ளவர் என்ற அடையாளத்துடன் பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தமிழ்நாட்டில் அறியப்படுகிறார்.

  தமிழுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது மட்டுமன்றி, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காட உரிமை வேண்டும், பாரதியாருக்கு அவர் காசியில் வாழ்ந்த வீட்டில் நினைவிடம் அமைக்க வேண்டும். திருவள்ளுவர் பற்றி வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பயிற்றுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

  மேலும், திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரையோரம் அமைக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

  இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் பக்தர்கள் புனித நீராடும் கங்கை நதிக் கரைப் பகுதியில் திருவள்ளுவர் சிலையை அமைக்க அந்த மாநில அரசிடம் அனுமதி கோரினார்.

  நிலம் அளித்தது உ.பி. அரசு: கங்கை நதிக் கரையோரப் பகுதிகளின் பராமரிப்பை உத்தரப் பிரதேச மாநில அரசு கவனித்து வருகிறது. எனவே, உத்தரகண்ட் அரசு அறிவுறுத்தலின்படி உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், அந்த மாநிலத்தில் ஆளும் சமாஜவாதி கட்சியின் பொதுச் செயலர் ராம்கோபால் யாதவ் ஆகியோரைச் சந்தித்து திருவள்ளுவர் சிலை அமைக்க நிலம் ஒதுக்க அவர் அனுமதி கோரினார். அவரது கோரிக்கையை ஏற்று சிலையை நிறுவுவதற்கான நிலத்தை ஒதுக்கி அந்த மாநில அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, தருண் விஜய்யின் முயற்சியை ஆதரிக்கும் வகையில், திருவள்ளுவர் திருநாட்கழகம் உதவியுடன் மாமல்லபுரத்தில் திருவள்ளுவர் சிலைத் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

  இந்தச் சிலையை அமைப்பதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் நிதி ஆதாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளதாக தருண் விஜய் தெரிவித்துள்ளார்.

  சென்னையில் விழா: இந்தச் சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவள்ளுவர் திநாட்கழகம் சார்பில் சென்னை, தி.நகர் வாணி மகாலில் உள்ள மகாசுவாமிகள் அரங்கில் வரும் 27-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

  இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியன், மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சுவாமி தயானந்த சரஸ்வதி, திருப்பனந்தாள் காசி திருமடத்தின் தவத்திரு முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், திருவள்ளுவர் திருநாட்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சாமி. தியாகராஜன், செயலர் பி.ஆர். ஹரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai