தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை
By dn | Published on : 17th January 2015 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
"தெஹல்கா' பத்திரிகையின் நிறுவனர் தருண் தேஜ்பாலுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரங்களுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தருண் தேஜ்பால் தனது அலுவலகத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்த பெண் ஒருவரை கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தனக்கு அரசுத் தரப்பு வழங்காததால் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பால் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தருண் தேஜ்பால் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, தேஜ்பாலுக்கு எதிரான வழக்கை கோவா நீதிமன்றம் விசாரிப்பதற்கு மூன்று வார இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.