Enable Javscript for better performance
காஷ்மீர் வளர்ச்சிக்கு எல்லை தாண்டிய சக்திகளால் தடங்கல்: ஆளுநர் வோரா- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர் வளர்ச்சிக்கு எல்லை தாண்டிய சக்திகளால் தடங்கல்: ஆளுநர் வோரா

    By DN  |   Published on : 27th January 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு எல்லைத் தாண்டிய சக்திகள் தடையாக இருக்கின்றன என்று அந்த மாநில ஆளுநர் என்.என். வோரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஜம்முவில் உள்ள மௌலானா ஆஸாத் மைதானத்தில், குடியரசுத் தினத்தையொட்டி தேசியக் கொடியை அவர் திங்கள்கிழமை ஏற்றி வைத்து பேசியதாவது:

    ஜம்மு-காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு, எல்லைத் தாண்டிய எதிர்மறை சக்திகளும், அமைதி, சகஜநிலையை பேணுவதற்கு எழும் தொடர் சவால்களும் தடையாக இருக்கின்றன.

    மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதி, சட்டம் - ஒழுங்கு நிலையை பேணுவது மிகவும் முக்கியமானதாகும்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும், சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஊடுருவல் முயற்சிகளும் கண்டிக்கத் தக்கவை. சர்வதேச எல்லைப் பகுதியில் மட்டும் எல்லைக்கு அப்பால் இருந்து இருமுறை பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. எல்லை நெடுகிலும் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். எல்லைப் பகுதிகளில் உள்ள கிராம மக்களின் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாதுகாப்புப் படையினர், மாநில பாதுகாப்புக்காக மனப்பூர்வமாக பணியாற்றியதும், தேசத்தை பாதுகாக்கும் விவகாரத்தில் கொண்டுள்ள உறுதிப்பாடும் பாராட்டத்தக்கது. மாநில, மத்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன். நாட்டை பாதுகாப்பதற்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்கள், அதிகாரிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்றார் வோரா.

    பலத்த பாதுகாப்பு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில், அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மாநில போலீஸார், ராணுவம், துணை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால், ஜம்மு-காஷ்மீரில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியாக நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai