Enable Javscript for better performance
பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் மறைவு- Dinamani

சுடச்சுட

    
    klr

    இந்தியாவின் முன்னணி கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் (94) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தார். சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் தலைசிறந்த கார்ட்டூனிஸ்ட்டாகத் திகழ்ந்த அவர் உருவாக்கிய கேலிச் சித்திரங்களில் பொதுஜனம் (காமன் மேன்) என்ற கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

    சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த வாரம் புணேவில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

    நோய்த்தொற்று, வயோதிகம் காரணமாக அவரது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்து வந்தன. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை 6.50 மணிக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆர்.கே.லட்சுமண் உயிரிழந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.லட்சுமண், பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் இளைய சகோதரராவார். "தி இந்து' நாளிதழில் வெளியான ஆர்.கே.நாராயண் சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரையத் தொடங்கிய லட்சுமண், அதன் பிறகு மைசூரில் இயங்கிய "கொரவஞ்சி' என்ற கன்னடப் பத்திரிகைக்கும், உள்ளூர் செய்தித் தாள்களுக்கும் கேலிச் சித்திரம் வரைந்து வந்தார்.

    மும்பை பத்திரிகை ஒன்றில் பால் தாக்கரே கேலிச் சித்திரக் கலைஞராக இருந்த போது, அவருடன் ஆர்.கே.லட்சுமணும் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு "டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் 1951-ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட்டாகச் சேர்ந்த லட்சுமண், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றினார். 

    அரசியல், நாட்டு நடப்பு உள்ளிட்ட விஷயங்களை பக்கம், பக்கமாக எழுதி விமர்சித்து வந்த காலகட்டத்தில், தனது கேலிச் சித்திரத்தின் மூலம் அரசியல் சூழல்களை எளிமையாக விளக்கிய பெருமை ஆர்.கே.லட்சுமணுக்கு உண்டு.  அவர் உருவாக்கிய "பொதுஜனம்' என்ற கதாபாத்திரம், மும்பையில் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. "யு செட் இட்' என்ற தலைப்பில் அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் நாடு முழுவதும் பேசப்பட்டன.

    பத்ம விபூஷண், பத்ம பூஷண், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சிறந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கான பி.டி.கோயங்கா விருது, மகசேசே விருது, ஹிந்துஸ்தான் டைம்ஸ்

    பத்திரிகையின் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு விருதுகளை ஆர்.கே.லட்சுமண் பெற்றுள்ளார்.

    "ஹோட்டல் ரிவியேரா', "தி மெசஞ்சர்' உள்ளிட்ட நாவல்களையும் அவர் எழுதியுள்ளார். ஆர்.கே.லட்சுமணின் சுயசரிதையான "தி டனல் ஆஃப் டைம்' நூல், மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    கடந்த 1985-ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில், ஆர்.கே.லட்சுமணின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிரிட்டனில் இந்தியர் ஒருவரின் கேலிச் சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது அதுவே முதல் முறை. 

    கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் கேலிச் சித்திரங்கள் வரையத் தொடங்கினார்.

    மறைந்த ஆர்.கே.லட்சுமணுக்கு கமலா என்ற மனைவியும் ஸ்ரீனிவாசன் என்ற மகனும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai