Enable Javscript for better performance
அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்: திக்விஜய் சிங்- Dinamani

சுடச்சுட

    

    அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்: திக்விஜய் சிங்

    By dn  |   Published on : 28th January 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    digvijay_singh

    இந்திய - அமெரிக்கா இடையேயான ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பாதுகாப்பான அணு தொழில்நுட்பம் கிடைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, மத்திய அரசு விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது இந்தியா - அமெரிக்கா இடையே கையெழுத்தான ஆக்கப்பூர்வ அணுசக்தி ஒப்பந்தத்தை தேச நலனுக்கு எதிரானது என பாஜக தலைவர்கள் விமர்சித்தனர். பின்னர் பாஜக தெரிவித்த ஆலோசனைகளை ஏற்று, அதில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

    இருந்தும், அணுசக்தி ஒப்பந்தத்தை பாஜக எதிர்த்தது. காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழக்கவும் முயற்சித்தது.

    ஆனால், மத்தியில் தற்போது அமைந்துள்ள பாஜக அரசானது, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால், அணுவிபத்து ஏற்படும்பட்சத்தில் இழப்பீடு வழங்குவது தொடர்பாக சேர்க்கப்பட்ட சட்ட ஷரத்துகளை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கு பாதுகாப்பான அணுசக்தி தொழில்நுட்பம் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் என்னவென்பதை மத்திய அரசால் இதுவரை தெரிவிக்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு என்ன காரணி முக்கியமாக விளங்கியது என்பதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில், நாட்டின் இறையாண்மை, நலனை மத்திய அரசு உறுதி செய்யும் என காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

    மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பல்வேறு விவகாரங்களிலும் பாஜக தனது நிலைப்பாட்டை முழுவதும் மாற்றிக் கொண்டு விட்டது. காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டையை எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜக எதிர்த்தது. ஆனால், மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு ஆதாரை ஏற்றுக் கொண்டு, அதை செயல்படுத்தியது.

    கருப்புப் பண மீட்பில் தோல்வி: மத்தியில் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்போம் என பாஜக உறுதியளித்தது. அதில் பாஜக தோல்வியடைந்து விட்டது.

    சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையிலும், இந்தியாவில் அதற்கேற்ப பெட்ரோல்- டீசல் விலை மாற்றியமைக்கப்படவில்லை. பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைத்து, அதன் பலனை மக்களுக்கு அளிக்காமல், அரசின் கஜானாவை நிரப்புவதற்காக அந்தப் பொருள்களின் மீதான வரியை அரசு அதிகரித்தபடி உள்ளது.

    வெளிநாட்டு தயாரிப்புப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியோ "இந்தியாவில் உருவாக்குவோம்' என வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த விவகாரத்தில், ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்துக்கும் பெரும் முரண்பாடு காணப்படுகிறது என்றார் திக்விஜய் சிங்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai