Enable Javscript for better performance
ஆம் ஆத்மி கட்சியை ஆதரிக்க ஐக்கிய ஜனதா தளம் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது என்று ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு ஐக்கிய ஜனதா தள கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐக்கிய ஜனதா தளத்தின் பிகார் மாநிலத் தலைவர் பாசிஸ்தா நாராயண் சிங் செவ்வாய்கிழமை கூறியதாவது:

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் கட்சியுடனான ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி பிகார் மாநிலத்திற்கு மட்டுமே பொருந்தும். பிற மாநிலங்களில் கூட்டணி குறித்து எங்கள் விருப்பம் போல் முடிவு செய்வோம் என்றார் அவர்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கேஜரிவாலுக்கு ஆதரவாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்யவிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் பிகார் மாநில செய்தித் தொடர்பாளர் பிரேம் சந்திர மிஸ்ரா வருத்தம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடுதான் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸூக்கு எதிராகச் செயல்படும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளிப்பது சரியல்ல. அரசியலில் சிறிதளவேனும் நேர்மை இருக்க வேண்டும்.

    சமீபத்தில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு எதிராகச் செயல்படும் இந்திய தேசிய லோக் தளத்தை நிதிஷ்குமார் ஆதரித்தார். இப்போது, தில்லியிலும் அவர் இவ்வாறு செய்தால், அது காங்கிரஸ் கட்சியினரை புண்படுத்தும்.

    இதையும் மீறி, நிதிஷ்குமார் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்தால், பிகாரில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு அளித்துவரும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.

    இதனிடையே, ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியப் பொதுச் செயலாளர் கே. சி. தியாகி "தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவாக செயல்பட ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டிருந்தது. எனினும், இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை' என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai