Enable Javscript for better performance
காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி? ஆளுநருடன் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் பாஜக, பிடிபி கூட்டணி ஆட்சி? ஆளுநருடன் ஆலோசனை

    By dn  |   Published on : 28th January 2015 11:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp-pdp

    ஜம்மு-காஷ்மீரில் பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) கட்சிகள் கூட்டு சேர்ந்து விரைவில் ஆட்சியமைக்கக் கூடும் எனத் தெரிகிறது.

    இதுதொடர்பாக இரு கட்சிகள் இடையேயும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து, ஆளுநர் என்.என். வோராவை அக்கட்சிகளின் தலைவர்கள் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    ஜம்முவில் ஆளுநர் என்.என். வோராவை பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தலைமையில், கட்சியின் மாநிலத் தலைவர் ஜுகல் கிஷோர், சட்டமன்ற உறுப்பினர் நிர்மல் சிங் ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

    அதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிடிபி சட்டமன்ற உறுப்பினர் ஹசீப் திரபு சந்தித்துப் பேசினார்.

    பாஜக, பிடிபி குழுவுடனான சந்திப்பு குறித்து, ஆளுநர் மாளிகை 2 அறிக்கைகள் வெளியிட்டது. அதில், "மாநிலத்தில் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜக, பிடிபி இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆளுநருடனான சந்திப்பு குறித்து பிடிபி சட்டமன்ற உறுப்பினர் ஹசீப் திரபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

    ஆளுநருடனான சந்திப்பு குறித்து பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்ததாவது: பிடிபியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2 அல்லது 3 விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. அதுவும் சித்தாந்தத்தின் அடிப்படையிலானதுதான். அதற்கு தீர்வு காணப்பட்டதும், ஆட்சியமைப்பதில் முடிவு எட்டப்படும். மாநிலத்தில் நிலையான ஆட்சியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதுதொடர்பாக பிடிபி, பாஜக இடையே விரைவில் முடிவு எட்டப்படும் என நினைக்கிறோம் என்றார்.

    பிடிபியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர் தெரிவிக்கையில், "குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தொடர்பாக தீர்வு காணப்பட்டதும், மாநிலத்தில் ஆட்சியமைப்போம்' என்றார்.

    ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிடிபி 28 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து மாநிலத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனிடையே, இடைக்கால முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா பதவியை ராஜிநாமா செய்ததால், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மாநிலங்களவைத் தேர்தலில் கூட்டணி?: இதனிடையே, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு காலியாக உள்ள 4 இடங்களுக்கு, வருகிற 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில், பிடிபி, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் எனத் தெரிகிறது. தேர்தல் நடைபெறவுள்ள 4 இடங்களில், 2 இடங்களுக்கு பாஜக ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai