Enable Javscript for better performance
கேரளம்: அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி பாஜக போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கேரளம்: அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி பாஜக போராட்டம்

    By dn  |   Published on : 28th January 2015 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    protest

    கேரள மாநிலத்தில் மது அருந்தும் கூடங்களின் உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மாநில நிதியமைச்சர் கே.எம். மணியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது.

    இதனால், மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் இயக்கப்படவில்லை. கடைகள் மூடப்பட்டிருந்தன.

    தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்கின. எனினும் குறைந்த எண்ணிக்கையிலேயே அலுவலர்கள் பணிக்கு வந்திருந்தனர். மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. சில பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    வெளியூர்களில் இருந்து ரயில்கள், விமானம் ஆகியவற்றின் மூலம் வந்திருந்தவர்கள், வாகனங்கள் இயக்கப்படாததால் அவதிக்கு உள்ளாயினர்.

    முன்னதாக, கேரள மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் வகையில், ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் கீழ் இயங்கும் ஓட்டல்களில் மது அருந்தும் கூடங்களின் உரிமங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில அரசு ரத்து செய்தது.

    இதையடுத்து, மூடப்பட்டுள்ள சில மது அருந்தும் கூடங்களை திறப்பதற்கு உதவி செய்வதாகக் கூறி, அவற்றின் உரிமையாளர்களிடம் அமைச்சர் கே.எம்.மணி லஞ்சம் வாங்கியதாக தொழிலதிபர் பிஜு ரமேஷ் குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் மணி, இந்த விவகாரம் தொடர்பாக, முரணான கருத்துக்களை பிஜு ரமேஷ் தெரிவித்து வருகிறார் என்றார்.

    இந்த விவகாரத்தில் அமைச்சர் மணியின் நிலைப்பாட்டுக்கு முதல்வர் உம்மன் சாண்டி ஆதரவளித்து வருகிறார். இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மணி தாக்கல் செய்வார் என்று சாண்டி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai