Enable Javscript for better performance
சுனந்தா கொலை வழக்கு: அமர் சிங்கிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    
    amarsingh

    மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தில்லி சிறப்பு புலனாய்வுப் படை போலீஸார், இந்த விவகாரம் தொடர்பாக சமாஜவாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் அமர் சிங்கிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்ததாவது:

    சுனந்தா புஷ்கர் மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் ஐ.பி.எல். சர்ச்சை குறித்துப் பேசியதாக அமர் சிங் அண்மையில் தெரிவித்திருந்தார். அதுதொடர்பாக, அமர் சிங்கிடம் போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

    சுனந்தா புஷ்கர் மகனிடம் விரைவில் விசாரணை: இந்த வழக்குத் தொடர்பாக சுனந்தா புஷ்கரின் மகன் சிவ் மேனனிடம் விசாரணை நடத்த அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்படவுள்ளது.

    சசி தரூரிடமும் மீண்டும் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார் பஸ்ஸி.

    இந்நிலையில், தில்லி போலீஸார் தன்னிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதாக அமர் சிங் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:

    உண்மையை எக்காலமும் மறைக்க முடியாது. அதுபோல அந்தக் கொடூரக் கொலை குறித்த உண்மையும் வெளியே வரும். இப்படி நான் தெரிவிப்பதால், சசி தரூருடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவோ அல்லது அவர் மீது நான் குற்றச்சாட்டு தெரிவிப்பதாகவோ அர்த்தம் அல்ல. அவர் எனது நண்பரின் (சுனந்தா புஷ்கரின்) கணவர். விசாரணையின்போது சுனந்தா குறித்து எனக்குத் தெரிந்த விவரங்களை போலீஸாரிடம் தெரிவித்தேன் என்றார் அமர் சிங்.

    அமர் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

    சசி தரூர், சுனந்தா புஷ்கர் ஆகியோரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அமர் சிங். அவரிடம் புதன்கிழமை நடத்தப்பட்ட விசாரணையின்போது, ஐ.பி.எல். சர்ச்சை குறித்து சுனந்தா புஷ்கர் தெரிவித்த விவரங்கள் குறித்தும், சசி தரூர் தொடர்பாக அவர் குற்றச்சாட்டு எதுவும் தெரிவித்தாரா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டன.

    சுனந்தா புஷ்கர், சசி தரூர் தம்பதிகள் இடையேயான உறவு எவ்வாறு இருந்தது? பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருடன் சசி தரூருக்கு தொடர்பு இருப்பதாக சுனந்தா எதுவும் தெரிவித்தாரா? என்றும் கேட்கப்பட்டன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    பின்னணி: முன்னாள் வெளியுறவுத் துறை இணையமைச்சராக இருந்தவர் சசி தரூர். அவரது மனைவியான சுனந்தா புஷ்கர், தில்லியில் உள்ள ஹோட்டலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது கொலை என்று குற்றச்சாட்டு எழவே, அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு தில்லி காவல்துறையில் சிறப்புப் புலனாய்வு படை அமைக்கப்பட்டது.

    வெளியுறவுத் துறை இணை அமைச்சராக சசி தரூர் இருந்தபோது, 2010ஆம் ஆண்டு ஐ.பி.எல். விளையாட்டு தொடர்பாக சர்ச்சை எழுந்தது. அப்போது தனது பதவியை தவறுதலாக பயன்படுத்தி, கொச்சி அணியில் சுனந்தா புஷ்கர் முதலீடு செய்த ரூ.70 கோடியை கிடைக்க செய்ததாக சசி தரூருக்கு எதிராக புகார் எழுந்தது. இதை சுனந்தா புஷ்கர் அப்போது மறுத்தார். பின்னர் கொச்சி அணியின் உரிமையாளரான ரென்டேஸ்வோஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து சுனந்தா விலகினார்.

    இந்நிலையில், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக தில்லி சிறப்புப் புலனாய்வுப் படை போலீஸார் வழக்குப்பதிவு செய்தபிறகு, ஐ.பி.எல்.லின் சர்ச்சை குறித்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். சசி தரூரிடமும் அண்மையில் விசாரணை நடத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai