Enable Javscript for better performance
நிலக்கரிச் சுரங்க ஊழல்: விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ- Dinamani

சுடச்சுட

    

    நிலக்கரிச் சுரங்க ஊழல்: விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ

    By dn  |   Published on : 28th January 2015 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cbi

    நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரத்தில், நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக், தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா ஆகியோருக்கு எதிரான வழக்கில் தில்லி நீதிமன்றத்தில் விசாரணை நிலவர அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.

    இதுதொடர்பான வழக்கு, தில்லி நீதிமன்றத்தில் நீதிபதி பரத் பராசர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் வி.கே. சர்மா ஆஜராகி வாதாடியதாவது:

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலவர அறிக்கையை ஜனவரி மாதம் 27ஆம் தேதி தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிமன்றத்தில் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இத்துடன் சேர்த்து, விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த வழக்கில், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், அந்த விசாரணை முடியும் வரை சீலிடப்பட்ட உறையை திறக்க வேண்டாம் என நீதிமன்றத்தை கேட்டுக் கொள்கிறோம். அத்துடன், இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு மேலும் 2 வாரகால அவசாகம் தேவைப்படுகிறது என்றார்.

    இதைக் கேட்ட நீதிபதி பராசர் தெரிவிக்கையில், "சிபிஐயின் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 19ஆம் தேதி சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும்' என்றார்.

    நாடு முழுவதும் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ரூ.1.86 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்தது.

    இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, ஒடிஸா மாநிலம், தலபிராவில் உள்ள 2ஆவது நிலக்கரிச் சுரங்கம், தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது.

    இதையடுத்து தில்லி நீதிமன்றத்தில், குமார மங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி. பரேக் ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் அந்த வழக்கை திடீரென முடித்துக் கொள்வதாகக் கூறி, நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை.

    மன்மோகன் சிங்கிடம் விசாரணை: மேலும், தலபிராவில் உள்ள 2ஆவது நிலக்கரிச் சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்தில், நிலக்கரித் துறை அமைச்சகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.

    இதையடுத்து, மன்மோகன் சிங், குமார மங்கலம் பிர்லா, மன்மோகன் சிங்கின் முன்னாள் முதன்மைச் செயலர் டிகேஏ நாயர், தனிச் செயலர் பிவிஆர் சுப்ரமணியம் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai