Enable Javscript for better performance
நீதிபதிகளின் மருத்துவச் செலவு விவரங்களை வெளியிடக் கோரி மனு- Dinamani

சுடச்சுட

    

    நீதிபதிகளின் மருத்துவச் செலவு விவரங்களை வெளியிடக் கோரி மனு

    By dn  |   Published on : 28th January 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மருத்துவச் செலவு விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, தகவல் உரிமை ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இதே தகவலைக் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, கடந்த ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி தள்ளுபடி செய்து, தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அதில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மருத்துவச் செலவை வெளியிடாமலிருக்க, தகவல் உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிவிலக்கு பொருந்தும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தனது மனுவில், "உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவச் செலவுக்கான தொகை, குடிமக்களின் வரிப் பணத்திலிருந்து அளிக்கப்படுகிறது. எனவே, அதுகுறித்த விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்க வேண்டும்' என்று சுபாஷ் சந்திர அகர்வால் கோரியிருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, தற்போது உயர் நீதிமன்றத்திலேயே அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு, மனுதாரர் கோரிய தகவல்களை அளிக்க வேண்டும் என, மத்திய தகவல் ஆணையம், உச்ச நீதிமன்ற நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருந்ததாவது:

    தனிநபர்களின் மருத்துவச் செலவுகள் குறித்த விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியிட்டால், குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட தகவல்களும் தெரியவரும்.

    இது, தனிமனித விஷயங்களில் தலையிடுவதாக உள்ளதால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மருத்துவச் செலவுகள் குறித்த விவரங்களை, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்க வேண்டியதில்லை என அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai