Enable Javscript for better performance
மதச் சகிப்புத்தன்மை வளர்ச்சிக்கு அவசியம்: ஒபாமா வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

  

  மதச் சகிப்புத்தன்மை வளர்ச்சிக்கு அவசியம்: ஒபாமா வலியுறுத்தல்

  By dn  |   Published on : 28th January 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  obama1

  "நாட்டின் வளர்ச்சிக்கு மதச் சகிப்புத்தன்மை அவசியம்' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.

  மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்த ஒபாமா, சவூதி அரேபியாவுக்குப் புறப்படும் முன்பாக, தில்லியில் உள்ள ஸ்ரீபோர்ட் அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். இளைஞர்கள், மாணவர்கள், முக்கியப் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த அரங்கில் ஒபாமா பேசியதாவது:

  வேற்றுமையில் ஒற்றுமை: இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும், ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள்.

  இதைத்தான், "ஒரு தோட்டத்தில் மலர்ந்த அழகான மலர்கள்' என்று மகாத்மா காந்தி வர்ணித்தார். "இந்தியாவையும், அமெரிக்காவையும், ஒரே மரத்தின் இரண்டு கிளைகள்' என்று கூறுவேன்.

  சமத்துவமற்ற உலகில் நாம் வாழ்ந்தாலும், ஒரு தேநீர் விற்பனையாளர் பிரதமராவதற்கு இந்தியா அனுமதித்தது. சமையல்காரரின் பேரனான என்னை அதிபராவதற்கு அமெரிக்காவும் அனுமதித்தது.

  ஒவ்வொரு மனிதனுக்கும், தான் விரும்பும் மதத்தைத் தேர்வு செய்யவும், பின்பற்றவும், பரப்புவதற்கும் உரிமை உள்ளது. எந்தவித அச்சுறுத்தலும், பயமுமின்றி மதத்தை அவர் பின்பற்ற வேண்டும். இதற்கு இரு நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களிலும் இடமுள்ளது.

  இதனிடையே, தங்கள் மதத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இருப்பவர்கள், சகிப்புத் தன்மையின்றி, வன்முறை, தீவிரவாதம் ஆகிய செயல்களில் உலகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

  மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

  இயற்கையான நண்பர்கள்: மதச் சுதந்திரம், ஜனநாயக மதிப்பீடுகள், பன்முகத் தன்மை, விளிம்பு நிலையில் இருப்பவர்களும் முன்னேறுவதற்கு வாய்ப்பு அளிப்பது என இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளால், இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே அமைந்த நட்பு நாடுகளாக உள்ளன. மேலும், இந்தியாவின் சிறந்த நட்பு நாடாகவும் அமெரிக்கா விளங்கும்.

  வறுமை ஒழிப்பு: கடந்த சில ஆண்டுகளில், மற்ற நாடுகளைக் காட்டிலும், வறுமையில் இருந்து ஏராளமானோரை இந்தியா மீட்டு அதிரடி சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் வறுமை ஒழிப்புக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டவும், இந்தியா வழிவகுத்துள்ளது.

  பெண் சுதந்திரம்: குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நான் வந்தபோது, ஆயுதப்படையைத் தலைமை தாங்கிச் சென்ற பெண், என்னை வரவேற்றார்.

  பெண்களின் முன்னேற்றம், வலிமை ஆகியவற்றின் குறியீடாகவே அந்தச் சம்பவம் உள்ளது. இந்தியாவில் அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது, நாட்டின் வளர்ச்சியில் இளம் பெண்களும் பங்காற்றி வருகின்றனர்.

  வெற்றி பெற்ற நாடுகள் அனைத்திலும், பெண்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது அனுபவங்கள் மூலமாக நாம் தெரிந்து கொண்ட விஷயம்.

  எனவே, ஒவ்வொரு பெண்ணின் உரிமையையும், சுதந்திரத்தையும், அவருடைய தந்தை அல்லது கணவர் அல்லது சகோதரன் உறுதி செய்ய வேண்டும். பொது இடங்களில் பெண்களிடம் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ள வேண்டும்.

  தொழில் வளர்ச்சிக்கு உதவி: இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

  இங்கு புல்லட் ரயில் சேவை, நவீன சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள், துறைமுகங்களை உருவாக்குதல், உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகிய திட்டங்களுக்கு இந்தியாவுக்கு உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என்றார் ஒபாமா.

  ஹிந்தியில் பேசிய ஒபாமா: அரங்கில் பேசத் தொடங்கியதும், "நன்றி' என்றும், முடிக்கும்போது "ஜெய்ஹிந்த்' என்றும் ஹிந்தியில் பேசினார் ஒபாமா.

  இந்திய நட்சத்திரங்களுக்குப் புகழாரம்: இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, ஹிந்தி நடிகர் ஷாருக்கான், விளையாட்டு வீரர் மில்கா சிங், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரைப் பாராட்டிப் பேசினார் ஒபாமா.

  ஒபாமா பேசிய பிறகு, அவரும் அவரது மனைவி மிச்செலும், பார்வையாளர்கள் பகுதிக்குச் சென்று, அவர்களுடன் கை குலுக்கினார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai