Enable Javscript for better performance
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சாதகமாகச் செயல்படவில்லை- Dinamani

சுடச்சுட

    
    manmohan_singh

    ஒடிஸா மாநிலம், தலபிராவில் உள்ள 2ஆவது நிலக்கரிச் சுரங்கம், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த நிறுவனத்துக்குச் சாதகமாக, எந்தவிதத்திலும் செயல்படவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

    ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தலபிரா சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து, மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐயை தில்லி சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தில்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் வீட்டில் 10 நாள்களுக்கு முன்பு அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

    அப்போது, ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கக் கோரி, தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா 2005ஆண்டில் இரண்டு முறை கடிதம் எழுதியது குறித்தும், அப்போது பிரதமர் அலுவலகம், நிலக்கரித் துறை அமைச்சகத்தில் நடந்தது என்னவென்பது குறித்தும் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எந்தவிதத்திலும் சாதகமாகச் செயல்படவில்லை என மன்மோகன் சிங் தெரிவித்தார்.

    மன்மோகன் சிங்கைப் போன்று, அவரது முன்னாள் முதன்மைச் செயலர் டி.கே.ஏ. நாயர், முன்னாள் தனிச் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் ஆகியோரிடமும் சிபிஐ விசாரணை நடத்தி, அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, மன்மோகன் சிங் வசம் நிலக்கரித் துறை அமைச்சகம் இருந்தபோது, தலபிராவில் உள்ள சுரங்கம் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக, குமாரமங்கலம் பிர்லா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பிறகு, அந்த வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai