Enable Javscript for better performance
2ஜி: அரசுத் தரப்பு சாட்சி ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    2ஜி: அரசுத் தரப்பு சாட்சி ஆஜராகாததால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    By dn  |   Published on : 28th January 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2g

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், கூடுதல் சாட்சிகளிடம் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டிய விசாரணையை புதன்கிழமைக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அத்துறையின் செயலராக இருந்த சித்தார்த் பெஹுரா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா உள்பட 14 பேர் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-இல் குற்றம்சாட்டியது.

    இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீது, குற்றம்சாட்டப்பட்டோர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்கள் அண்மையில் நிறைவடைந்தன. இவ்வழக்கில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் உள்பட கூடுதல் சாட்சிகள் சிலரிடம் விசாரணையை தொடங்க தில்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு, தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே.கோயல், "இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியமாக கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான, சென்னை கோடம்பாக்கம் இந்தியன் வங்கி கிளையின் மேலாளர் மணிக்கு, நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்பி இருந்தோம். ஆனால், அவர் (மணி) பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அந்த அழைப்பாணை திரும்ப வந்துவிட்டது.

    எனினும், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உதவிச் செயலர் நவில் கபூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராவார்' என்றார்.

    இதைக்கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, "அரசு தரப்பில் கூடுதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகாததால் இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

    முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை மீது வாதங்கள் முடிவடைந்த நிலையில், மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர் சத்யேந்திர சிங், கலைஞர் டிவி பொது மேலாளர் (நிதி) ராஜேந்திரன், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை உதவிச் செயலர் நவில் கபூர், 2007-இல் சென்னை இந்தியன் வங்கியின் கோடம்பாக்கம் கிளையில் தலைமை மேலாளராக இருந்த டி. மணி ஆகியோரை கூடுதல் சாட்சிகளாக வழக்கில் சேர்க்க சிபிஐ அனுமதி கோரியது. அதையடுத்து, கடந்த டிசம்பர் 19-இல் சிபிஐ நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai