Enable Javscript for better performance
நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    நாசிக் கும்ப மேளா அடிப்படை வசதி குறைபாடு: ஆன்மிகத் தலைவர்கள் அதிருப்தி

    By  நாசிக்,  |   Published on : 16th July 2015 03:56 AM  |   அ+அ அ-   |    |  

    மகாராஷ்டிர மாநிலம், நாசிக் கும்ப மேளா விழாவில், போதிய குடிநீர், மின்சார வசதிகள் செய்து தரப்படவில்லை என விழாவுக்கு வந்திருந்த ஆன்மிகத் தலைவர்கள் கூறினர்.
     12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்ப மேளா, மகாராஷ்டிரத்தின் நாசிக், திரையம்பகேஷ்வர் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
     இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு குழுக்களைச் சேர்ந்த சாதுக்கள், துறவிகள் உள்ளிட்ட ஆன்மிகத் தலைவர்கள் நாசிக்கிலும், திரையம்பகேஷ்வரிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில், தங்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் குறை கூறினர்.
     இதுகுறித்து திகம்பர ஜெயின் அகாடாவைச் சேர்ந்த தசரத தாஸ், புதன்கிழமை கூறியதாவது:
     இங்கு பல இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. கூடுதலாக குப்பைத் தொட்டிகளை வைத்திருக்க வேண்டும். போதிய அளவுக்கு மின்சாரம், குடிநீர் ஆகியவை விநியோகிக்கப்படவில்லை. அவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலைப் பராமரிப்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கண்ணம்வார் பாலத்தில் இருந்து லக்ஷ்மிநாராயண் கணவாய் வரை, 1.5 கி.மீ தொலைவுக்கு பாதைத் திறக்கப்படவில்லை.
     சாதுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் முள்மரங்கள் நிறைந்திருப்பதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர் என்று தசரத தாஸ் கூறினார்.
     இந்நிலையில், கும்ப மேளாவுக்கான சிறப்பு அதிகாரியும், சாதுக்களின் கிராமப் பொறுப்பாளருமான யோகேஷ் பகாரே கூறியதாவது:
     சாதுக்களுக்கு குடில்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணி நிறைவடைந்தவுடன், குடிநீர், மின்சார விநியோகப் பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிடும். விழாவின் முக்கிய நிகழ்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குள் பணிகள் நிறைவடைந்துவிடும் என்றார் யோகேஷ் பகாரே.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai