Enable Javscript for better performance
நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு- Dinamani

சுடச்சுட

    

    நாசிக் கும்பமேளாவில் முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு

    By  மும்பை,  |   Published on : 18th July 2015 01:01 AM  |   அ+அ அ-   |    |  

    நாசிக் கும்பமேளாவில், புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
     இதுதொடர்பாக மகாராஷ்டிர நீர்வளத் துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன் அந்த மாநில சட்ட மேலவையில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     நாசிக்கில் தொடங்கியுள்ள கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
     பக்தர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கும்பமேளாவின் புனித நீராடல் நடைபெறும் தினங்களில் மிக முக்கியப் பிரமுகர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
     இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
     சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்த எந்த அச்சமுமின்றி பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
     மேலும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மடாதிபதிகள் தங்குவதற்காக தனியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார் கிரீஷ் மகாஜன்.
     கும்பமேளாவில் ஆகஸ்ட் 29, செப்டம்பர் 13, 18, 25 ஆகிய நாள்களில் புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
     கடந்த 14-ஆம் தேதி நாசிக் கும்பமேளா, கொடியேற்றத்துடன் தொடக்கி வைக்கப்பட்டது. அதே நாளில் ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியின் கோதாவரி நதியில் நடைபெற்ற புஷ்கரம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
     அதைக் கருத்தில்கொண்டே, நாசிக் கும்பமேளாவில் மிக முக்கியப் பிரமுகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai