Enable Javscript for better performance
இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம்

    By dn  |   Published on : 07th March 2015 05:46 AM  |   அ+அ அ-   |    |  

    இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் 10ஆம் தேதியன்று, தனது சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குகிறார்.

    இலங்கைக்கு 1987ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி சென்றார். அவருக்கு அடுத்ததாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

    இந்த சுற்றுப் பயணத்தின்போது, தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் மோடி செல்லக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இந்த ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை ஆகிய 3 நாடுகளில், வரும் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார்.

    தனது பயணத்தின் முதல் கட்டமாக செஷல்ஸ் செல்லும் பிரதமர் மோடி, மார்ச் 11ஆம் தேதியன்று அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலெக்சிஸ் மிச்செல்லுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அவர், இரு நாடுகளுக்கு இடையே கடற்படை ரீதியிலான உறவை வலுப்படுத்துவது, வளர்ச்சி தொடர்பாக ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியவை குறித்து செஷல்ஸ் அதிபருடன் ஆலோசனை நடத்துகிறார்.

    அதைத் தொடர்ந்து, மோரீஷஸில் 11, 12 ஆகிய இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு அவர், மோரீஷஸ் பிரதமர் அனிருத் ஜகந்நாத்துடன் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். மோரீஷஸின் தேசிய தினக் கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

    பின்னர், இலங்கையில் 13, 14 ஆகிய இரு தினங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார் என வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை நாடாளுமன்றத்தில் மோடி உரை: பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் குறித்து, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

    இலங்கைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அணிவகுப்பு மரியாதை, துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

    அதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவுடன், பிரதமர் மோடி இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக, பிரதமர் மோடியை கௌரவிக்கும் வகையில், அவருக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விருந்து அளிக்கவுள்ளார்.

    இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்விலும் மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடிக்கு, இலங்கை அதிபர் சிறீசேனா, அரசு சார்பில் சிறப்பு விருந்து அளிக்கவுள்ளார்.

    இந்திய அமைதிப் படையினர் நினைவிடத்தில் அஞ்சலி: இலங்கைக்கு அமைதிப்பணிக்காக வந்து உயிர்நீத்த இந்திய அமைதி காப்புப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்துக்கு சென்று மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தவுள்ளார். கொழும்பு அருகே உள்ள மகாபோதி சங்கத்துக்கும் அவர் செல்கிறார்.

    யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள வீடுகளை, பயனாளிகளுக்கு பிரதமர் மோடி அளிக்கவுள்ளார். அ னுராதபுரத்தில் உள்ள ஸ்ரீமகா போதி என அழைக்கப்படும் போதி மரத்தின் கிளையில் இருந்து உருவான மிகப் பழைமையான புனித மரத்தையும் அவர் பார்வையிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    கொழும்பில் சுஷ்மா ஸ்வராஜ்

    பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார். அவர், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவை சந்தித்துப் பேசினார்.

    கொழும்பில் இரு நாள்கள் தங்கியிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.

     

    மாலத்தீவு பயணம் ரத்து

    மாலத்தீவு பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.

    செஷல்ஸ், இலங்கை, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் சேர்த்து மாலத்தீவிலும் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுதொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியுறவு அமைச்சகத்தின் அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.

    மாலத்தீவில் நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்ல விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே, பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp