அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்த
அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆணை

மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது இரண்டு மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்த நடவடிக்கையில் விதிகளை மீறியதாக சிபிஐ தொடுத்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் உள்பட 6 பேருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 2-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 இரண்டு வழக்குகள்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை அன்புமணி ராமதாஸ் இருந்தார். அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம், ரே பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-ஆராய்ச்சி மையத்துக்கு அங்கீகாரம் புதுப்பித்த நடவடிக்கையில் விதிமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
 இவற்றில், இந்தூர் மருத்துவக் கல்லூரி விவகார வழக்கில் அன்புமணி உள்பட 10 பேர் மீதும், ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி விவகார வழக்கில் அன்புமணி உள்பட 5 பேர் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, குற்றப்பத்திரிகையில் சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்த சிறப்பு நீதிபதி அஜய் குமார் ஜெயின் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவின் விவரம்:
 முகாந்திரம் உள்ளது: "இந்தூர் இண்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் தொடர்பான வழக்கில் அன்புமணி ராமதாஸ், கே.வி.எஸ்.ராவ், எஸ்.எஸ்.பஹதோரியா, நிதின் கோத்வால், டாக்டர் பவன் பம்பானி ஆகியோர் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது.
 இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டாக்டர் ஜே.எஸ்.தூபியா, டாக்டர் திபேந்திர குமார் குப்தா, சுதர்ஷன் குமார், டாக்டர் கே.கே.சக்சேனா, டாக்டர் எஸ்.கே.டோங்கியா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
 ரோஹில்கண்ட் மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ், கே.வி.எஸ்.ராவ், கே.கே.அகர்வால் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. டாக்டர் விந்து அமிதாப், டாக்டர் சஞ்சீவ் குமார் ரஸானியா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லாததால் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். மேற்கண்ட இரு வழக்குகளில் ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுகளும் முறைப்படி நவம்பர் 2-ஆம் தேதி பதிவு செய்யப்படும்' என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 சட்டப்படி எதிர்கொள்வேன்
 எனக்கு எதிராக சிபிஐ தொடுத்துள்ள வழக்குகளை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
 இதுகுறித்து தில்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் புதன்கிழமை கூறியதாவது:
 இரு வழக்குகளிலும் சிபிஐ நடத்திய முதல் கட்ட விசாரணையிலும், பின்னர் நீதிமன்றத்தில் பதிவு செய்த அறிக்கையிலும் (முதல் தகவல் அறிக்கை) எனது பெயர் இடம் பெறவில்லை.
 2012-இல் எனது பெயரை சிபிஐ குறிப்பிட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நடவடிக்கை அரசியலுக்காக மேற்கொள்ளப்பட்டது.
 அடிப்படை ஆதாரமின்றி தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து எனது பெயரை நீக்கக் கோரி 2012-இல் மனு தாக்கல் செய்தேன். கடந்த மூன்றரை ஆண்டுகளில் அடுத்தடுத்து மாற்றப்பட்ட நான்கு நீதிபதிகளால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.
 இந்நிலையில், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வழக்கின் நடைமுறையாகும். அதை சட்டப்படி எதிர்கொண்டு நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்' என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com