Enable Javscript for better performance
\\\"ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்\\\' அமலாகிறது- Dinamani

சுடச்சுட

    

    "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' அமலாகிறது

    By புது தில்லி  |   Published on : 06th September 2015 04:49 AM  |   அ+அ அ-   |    |  

    manokar

    முன்னாள் ராணுவத்தினரின் நலனுக்காக "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

    இதன்மூலம், முன்னாள் ராணுவத்தினரின் 40 ஆண்டுகால கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

    ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம், ஆண்டுதோறும் ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் முன்னாள் ராணுவத்தினர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அவர்களுடன் மத்திய அரசு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    இதன் தொடர்ச்சியாக, தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை, முன்னாள் ராணுவத்தினர் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியத்தை அதிகரிப்பது என்பதன் அடிப்படையில், "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    கடந்த 2013ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டும், கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.

    ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள், இந்தத் திட்டத்தின்கீழ் வரமாட்டார்கள். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விதிகளை உருவாக்குவதற்காக ஒரு நபர் நீதிக் குழு ஏற்படுத்தப்படும். அந்தக் குழு, 6 மாதங்களில் தனது அறிக்கையை அளிக்கும்.

    "ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்' திட்டம், ஒரு சிக்கலான பிரச்னையாகும். ராணுவத்தின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் நலன்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முப்படைகள் இடையேயானபணி சார்ந்த பிரச்னைகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இது நிர்வாகம் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமே அல்ல.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ. 8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரையிலும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிலுவைத் தொகைகள் 4 தவணைகளாக 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். உயிரிழந்த முன்னாள் ராணுவத்தினரின் மனைவியர்க்கு நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்.

    26 லட்சம் முன்னாள் ராணுவத்தினர் பயனடைவர்: இத்திட்டத்தின் கீழ், 26 லட்சம் முன்னாள் ராணுவத்தினரும், உயிரிழந்த 2 லட்சம் முன்னாள் ராணுவத்தினரின் மனைவியரும் உடனடியாக பயனடைவார்கள். முன்னாள் ராணுவத்தினருக்கு நிலுவைத் தொகை வழங்குவதற்கு மட்டும் அரசுக்கு ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை தேவைப்படுகிறது.

    ஒரே பதவியில், ஓரே காலத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்றவர்களுக்கு, 2013ஆம் ஆண்டில் அவர்கள் பெற்ற குறைந்தபட்ச, அதிகப்பட்ச ஓய்வூதியத்தின் சராசரியை அடிப்படையாக கொண்டு, ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்படும். அந்த சராசரிக்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோரின் நலன்களும் பாதுகாக்கப்படும்.

    முந்தைய அரசானது "ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.500 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

    ஆனால், உண்மையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.8,000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை செலவாகும். எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கும்.

    "ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்' பிரச்னை 40 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது 2014-15ஆம் ஆண்டில் இது செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் திட்டம் எத்தகையது என்பதை தெரிவிக்கவில்லை என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

    இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், "இத்திட்டத்தின்கீழ் போரின்போது காயமடைந்து, விருப்ப ஓய்வு பெற்றவர்களும் பயனடைவார்கள். இதுதொடர்பான விரிவான உத்தரவுடன் மத்திய அரசு இன்னும் ஒரு மாதத்தில் அறிவிப்பு வெளியிடும்' என்றன.

    முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி

    மத்திய அரசின் "ஒரே பதவிக்கு, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் அம்சங்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்து தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ராணுவத்தினர் அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சத்பீர் சிங் கூறியதாவது:

    மத்திய அரசின் நோக்கங்களை வரவேற்கிறோம். அதேசமயம், மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் முக்கிய அம்சங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதாவது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் ஓய்வூதியம் உயர்த்தப்படும்; விருப்ப ஓய்வு பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் ஆகிய அம்சங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் வைத்த கோரிக்கைகளில் மத்திய அரசு, ஒரு கோரிக்கையையே ஏற்றுள்ளது. 6 கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது. ஒரு நபர் நீதிக் குழுவை ஏற்படுத்துவதையும் நாங்கள் ஏற்க மாட்டோம். ஆதலால், இந்த நிலையில் தில்லியில் நாங்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை திரும்பப் பெற மாட்டோம். எங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வோம் என்றார் அவர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp