
'வாழும் கலை' சார்பில் தில்லியில் நடத்தப்படும் உலக கலாசார விழாவுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ள அபராதத்தை செலுத்த முடியாது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறினார்.
ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'வாழும் கலை' சார்பில் தில்லி யமுனா நதி கரையில் உலக கலாசார விழா நடைபெற இருக்கிறது.
இதை எதிர்த்து பலர் தில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், வாழும் கலை நிறுவனத்துக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், நாங்கள் எவ்வித தவறான காரியங்களிலும் ஈடுபடவில்லை. நாங்கள் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம். ஆனால், அபராதம் செலுத்த மாட்டோம் என்றார்.
இந்நிகழ்ச்சி ஒரு கலாசார ஒலிம்பிக் போன்றதாகும். இதுபோன்ற நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வரவேற்க வேண்டும் என்றார் ரவிசங்கர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு ஏற்கதக்கதல்ல. இந்நிகழ்ச்சிக்காக ஒத்துழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நாங்கள் எவ்வித விதி மீறலிலும் ஈடுபடவில்லை. எனவே, கலாசார நிகழ்ச்சி திட்டமிட்டப்படி நடைபெறும். பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார் ரவி சங்கர்.
விவசாய சங்கம் மனு தள்ளுபடி
இதனிடையே உலக கலாசார நிகழ்ச்சிக்கு தடை கோரி பாரதீய கிஷான் மஸ்தூர் சமிதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, மனுதாரர் தேசிய பசுமை தீர்பாயத்தை அணுக வேண்டும் என்றார்.
அதே நேரத்தில் இந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் பல நாள்களாக நடைபெற்று வரும் நிலையில், ஏன் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இதிலிருந்து விளம்பரம் தேட விரும்புகிறீர்களா என்றும் வினவினர்.