
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத அளவில் அடைந்துள்ள வீழ்ச்சியால் நரேந்திர மோடி அரசு சேமித்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி எங்கே என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
சென்னை லயோலா கல்லூரியில் வணிக நிர்வாகவியல் பயிலகத்தில், மத்திய பட்ஜெட் குறித்து வியாழக்கிழமை ஆய்வுரையாற்றி அவர் மேலும் பேசியதாவது:
நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 109 அமெரிக்க டாலர்களாக இருந்தது. இப்போது 30 டாலர்களாக வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்ததுள்ளது.
இதனால் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை மத்திய அரசு சேமிக்கிறது. வரி சதவீதம், தனியாருக்கான பங்குகளைக் கழித்துப் பார்த்தால்கூட, ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி அரசு சேமித்துள்ளது. இவ்வாறு சேமித்த பணம் எங்கே போனது?
விவசாயம், ரயில்வே எனப் பல துறைகளுக்கு இந்தப் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருக்கலாம். எத்தனையோ நல்ல ஆக்கப்பூர்வமான விஷயங்களில்
முதலீடு செய்திருக்கலாம். ஆனால், அதை அவர்கள் செய்யத் தவறி விட்டனர்.
காங்கிரஸ் ஆட்சியில்... காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கேட்ட பிறகே நிதிநிலை அறிக்கைகளை உருவாக்கினோம். மைனாரிட்டி அரசின் நிதியமைச்சராக இருந்த நான், சில சமரசங்களுக்குட்பட்டே நிதி நிலை அறிக்கைகளை உருவாக்கினேன். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனி மெஜாரிட்டியுடன் உருவாகியுள்ள மோடி அரசால், எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காத நிதிநிலை அறிக்கையை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர்கள் தவற விட்டுவிட்டனர்.
குறைந்து வரும் ஏற்றுமதி: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தொடர்ச்சியாக 14 மாதங்களாக ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலை இன்னும் நீடிக்கும் என்றே தகவல்கள் கூறுகின்றன. இதற்கான எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. தனியார் துறை தொடர்பாகவும் தெளிவான அணுகுமுறை இந்த நிதி நிலை அறிக்கையில் இல்லை.
இது இந்தியாவின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும் என்றார் ப.சிதம்பரம்.