
தஞ்சாவூர் மாவட்டம், சோழன்குடிகாடு பகுதியில் டிராக்டர் வாங்கிய கடனை வசூலிக்க சென்றபோது விவசாயிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் காவல் துறை தலைவர் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மனித உரிமை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன். விவசாயத்துக்கான டிராக்டர் வாங்குவதற்காக பாலன், தனியார் வங்கியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ரூ. 3,,80,000 வாங்கியிருந்தார். இதுவரை ரூ. 4,38,880 செலுத்தியுள்ளார்.
எனினும் விவசாயி பாலன் இன்னும் ரூ. 1,34,000 செலுத்த வேண்டும் என வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மீதமுள்ள பணத்தை வசூலிப்பதற்காக வங்கி அதிகாரிகள் உள்ளூர் காவல் துறையினருடன், பாலனின் விவசாய பண்ணைக்கு சென்றனர்.
அங்கு டிராக்டரில் அமர்ந்து விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பாலனை வலுகட்டாயமாக இறக்கியுள்ளனர். மேலும், அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த செய்தி மற்றும் வீடியோக்கள் இன்று வெளியாயின.
இதுகுறித்த கருத்து தெரிவித்த தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி டி.முருகேசன், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களது கடன் தொகையை வசூலிப்பதற்காக காவல் துறையைக் கொண்டு மிருகத்தனமாக தாக்குகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக தாக்கப்படுகின்றனர்.
வங்கி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து நடத்தும் இதுபோன்ற செயல்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது என்றார்.
இந்நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம், இன்று வெளியான செய்திகளின் அடிப்படையில் விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில தலைமைச் செயலர், காவல் துறை தலைவர் ஆகியோர் இரு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போலீஸார் மீது நடவடிக்கை கோரிக்கை
இதனிடையே விவசாயியை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினர் மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை சந்தித்து மனு அளித்தனர்.