தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா?இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேட்டி

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமையுமா?இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பேட்டி

தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பான பரிந்துரை மீதான விவாதம் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று மத்திய பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
Published on

இந்த குழுவின் சார்பில் "நாட்டில் வழக்கமான நீதி அமைப்பு முறை மற்றும் பழங்குடி நீதி அமைப்பு முறை இடையிலான ஒத்துழைப்பு' எனும் தலைப்பிலான 18ஆவது அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிமை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் சுதர்சன நாச்சியப்பன் விளக்கினார்.

அப்போது, தமிழகத்தில் உச்ச நீதிமன்றக் கிளை அமைப்பது தொடர்பாக நிலைக் குழு ஏற்கெனவே அளித்திருந்த பரிந்துரை மீதான நிலவரம் குறித்து கேட்டதற்கு, சுதர்சனநாச்சியப்பன் அளித்த பதில்:

பணியாளர் நலன், மக்கள் குறைத்தீர்வு, சட்டம் மற்றும் நீதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு 2004-05 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றக் கிளையை நாட்டின் நான்கு மண்டலங்களில் அமைப்பது தொடர்பான தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அளித்தது.

2005-06 ஆம் ஆண்டில் நிலைக்குழு தமிழகம், கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் கிளையை அமைக்கலாம் என மீண்டும் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகம் மூலம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முழுமையான நீதிபதிகள் அமர்வு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், "உச்ச நீதின்றத்தின் கிளை அமைக்கும் தேவை எழவில்லை' என அந்த நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டு பரிந்துரையை நிராகரித்தது.

இந்த நிலையில், நிலைக் குழுவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கூட்டம் வரும் 29, 30ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதில் உச்ச நீதிமன்ற கிளை தொடர்பான விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார் சுதர்சன நாச்சியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com