
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் மனை வணிகத் துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர வகை செய்யும் மனை வணிக மசோதா, மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மனை வணிக மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
கணக்கில் வராத பணம் மனை வணிகத்தில் முதலீடு செய்யப்படுவதை தடுக்கவும், கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பணத்தில் 70 சதவீதம் தொகையை, ஒரு கட்டுமானத் திட்டம் நிறைவேறும் வரை, தனி வங்கிக் கணக்கில் வைத்து பராமரிக்கவும் இந்த மசோதா வகை செய்கிறது. குடியிருப்பு மற்றும் வணிக கட்டுமானத் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில், மாநில அளவில் மனை வணிக ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தவும் இந்த மசோதா வழி வகுக்கிறது.
மேலும், கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான வழக்குகளில், மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறும் கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டையுமோ விதிக்கவும் இந்த மசோதா வழி வகை செய்கிறது.
இதேபோல் முகவர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டையுமோ விதிக்கவும் இம்மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.