
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அதன் மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமாருக்கு கடந்த ஆண்டு அபராதம் விதிக்கப்பட்டது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, தற்போது தில்லி பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகப் பணியாற்றும் அந்த முன்னாள் மாணவி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜேஎன்யு வளாகத்தில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி திறந்தவெளியில் கன்னையா குமார் சிறுநீர் கழித்தார். அதை நான் கண்டித்தேன். அப்போது, அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். மேலும், என்னை அச்சுறுத்தினார். அதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நான் புகார் அளித்தேன். அதையடுத்து, கன்னையா குமாரிடம் நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் அவருக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் கன்னையா குமார் இவ்வாறு நடந்து கொண்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அவரைப் போன்றவர்கள் புரட்சியாளர்களாகத் தோற்றமளிப்பது என்னை அதிர்ச்சியடைய செய்கிறது என்று அந்த மாணவி கூறியுள்ளார்.
மேலும், கன்னையா குமாருக்கு அபராதம் விதித்து பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட உத்தரவின் நகலையும் அந்த மாணவி வெளியிட்டுள்ளார். மாணவியின் கடிதமும், பல்கலைக்கழக உத்தரவின் நகலும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதனிடையே, கன்னையா குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது உண்மைதான் என்று பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐஎஸ்எஃப் விளக்கம்: கன்னையா குமார் சார்ந்துள்ள அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு (ஏஐஎஸ்எஃப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னையா குமாரை விமர்சிக்கும் மாணவியின் உரிமையை மதிக்கிறோம். அதே நேரத்தில், பாலினச் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே கன்னையா குமாரின் நிலைப்பாடாகும். மேலும், அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, கன்னையா குமார் மாணவர் தலைவராக இல்லை என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கன்னையா மீது தாக்கு?: இதனிடையே, "தேசியவாதம்' தொடர்பாக கன்னையா குமார், ஜேஎன்யு வளாகத்தில் வியாழக்கிழமை உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் திடீரென கன்னையாவைத் தாக்கியதாகவும், அதையடுத்து அந்த இளைஞர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவித்தனர்.