மீனவர்கள் நலனுக்கு தனி அமைச்சகம் வேண்டும்:தில்லி பேரணியில் மீனவர்கள் வலியுறுத்தல்

மீன் வளம், மீனவர்கள் நலன் ஆகியவற்றுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
மீனவர்கள் நலனுக்கு தனி அமைச்சகம் வேண்டும்:தில்லி பேரணியில் மீனவர்கள் வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

மீன் வளம், மீனவர்கள் நலன் ஆகியவற்றுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய மீனவர் பேரவை சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்னர் தேசிய மீனவர் பேரவையின் தலைவர் எம்.இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு விடுதலையடைந்து 68 ஆண்டுகள் கடந்த பிறகும், பாரம்பரிய மீனவ சமூகம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் பின்தங்கியுள்ளது. 9 கடலோர மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் மொத்தம் சுமார் 3 கோடி மீனவ சமுதாயத்தினர் உள்ளனர். எனவே, மீன் வளம், மீனவர் நலன் ஆகியவற்றைப் பாதுகாக்க தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பாரம்பரிய மீனவ சமூகத்தை பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். வறட்சி போன்ற காலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதைப் போல மீனவர்கள் பெறும் கடன்களையும் தள்ளுபடி செய்யும் வகையில், மீன்பிடி தொழிலை விவசாயத்துக்கு இணையாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றை அசல் விலைக்கே மீனவர்களுக்கு வழங்க வேண்டும். மீன் வளம், மீனவர் நலன் பெயரில் தேசிய வங்கியை ஏற்படுத்த வேண்டும்.

இதே கோரிக்கைகளை கடந்த 2014 பொதுத் தேர்தலின் போதும் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தினோம். எங்களது நியாயமான கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையிலும் வெளியிட கேட்டுக் கொண்டோம். இந்த நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் ஏமாற்றத்தை தருகிறது என்றார் அவர்.

இந்தப் பேரணியில் கேரளம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம், ஒடிஸா, மேற்கு வங்கம், கோவா, டையு, டாமன் உள்ளிட்ட கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர். மேலும், தில்லி, சண்டீகர், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த உள்நாட்டு மீனவர்களும் பங்கேற்றனர். அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் ஆன்டன், தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு. பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகான் சிங்கை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com