நாடெங்கிலும் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ.8,000 கோடி செலவில் சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு இலவசமாக வழங்கவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இத்திட்டத்துக்கு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இந்தத் திட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பப் பெண்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.8,000 கோடி செலவில் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார்.
அப்போது அவர் பேசியது குறித்த விவரம்:
விறகு அடுப்புகளில் சமைப்பதால் பெண்கள் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். சமையல் அறையில் எழும் அந்தப் புகை 400 சிகரெட்டுகளின் புகைக்கு சமமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் தருணம் நெருங்கியுள்ளது.
இதன்படி, இந்த நிதியாண்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 50 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்க ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் 5 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் என்று ஜேட்லி கூறியிருந்தார்.