
தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லும் முன்பே கைது செய்யப்படாதது ஏன் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளனர்.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இது குறித்து பேசுகையில், விஜய் மல்லையா ஒன்றும் ஊசி இல்லையே, அவரை பார்ப்பதும், பிடிக்க முடியாமலும் போவதற்கு, ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அவரைப் பார்க்க முடியும். நான் மத்திய அரசிடம் கேட்கிறேன், ஏன் மல்லையாவைக் கைது செய்யவில்லை? ஏன் அவரது பாஸ்போர்ட் முடக்கப்படவில்லை என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, விஜய் மல்லையாவுக்கு எதிராக பலவீனமானதொரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
அதாவது, எப்போது விஜய் மல்லையா வெளிநாட்டில் இருந்தாரோ, அப்போது காங்கிரஸ் தான் ஆட்சியில் இருந்தது. ஃபெமா சட்டப்பிரிவின் கீழ் அப்போதுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.