Enable Javscript for better performance
அம்பேத்கரின் புகழை மறைத்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  அம்பேத்கரின் புகழை மறைத்துவிட்டது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

  Published on : 15th April 2016 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  13

  சட்ட மேதை பி.ஆர்.அம்பேத்கரின் புகழை காங்கிரஸ் கட்சி மழுங்கடித்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
   அம்பேத்கரின் எண்ணங்களை முழுமையாக நிறைவேற்றும் நோக்கில் தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
   அம்பேத்கரின் 125-ஆவது பிறந்ததினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது பிறப்பிடமான மெள நகரில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
   இதில் மோடி கலந்துகொண்டு பேசியபோது, அம்பேத்கரின் வாழ்வோடு தொடர்புடைய 5 இடங்களை மேம்படுத்த கடந்தகால காங்கிரஸ் அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
   நலிவடைந்த மக்களை மேம்படுத்த வேண்டும் என்பது உள்பட அம்பேத்கரின் அனைத்து எண்ணங்களையும் நிறைவேற்ற மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். மோடி மேலும் பேசியதாவது:
   அம்பேத்கரின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நான் செயல்பட்டு வருகிறேன். மோடி ஏன் இதையெல்லாம் செய்கிறார்? என்று சிலர் கவலைப்படுகின்றனர். நமது அர்ப்பணிப்பு உணர்வு காரணமாகவே இதைச் செய்கிறோம்.
   அம்பேத்கர் காட்டிய வழியை கடைப்பிடித்தால் மட்டுமே சமூக நல்லிணக்கத்தை எட்ட முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது காலடியை ஒட்டி பணிபுரிவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
   அடுத்த வீடுகளில் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்திய ஓர் பெண்ணின் மகன் (மோடி), இந்த நாட்டின் பிரதமராக முடியுமென்றால், அதற்கான பெருமை அம்பேத்கரையே சேரும்.
   அம்பேத்கர் இறுதியாக தில்லியில் வாழ்ந்த வீட்டை அவருக்கான தேசிய நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த நீங்கள் ஏன் இதைச் செய்யவில்லை? அதை நாங்கள் செய்யும்போது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. இதற்காக நீங்கள் வருந்த வேண்டும்.
   நாங்கள்தான் ஏழைகளின் இறைத்தூதர் என்று சிலர் கடந்த 60 ஆண்டுகளாக கூறி வருகின்றனர். இத்தனை ஆண்டுகளில் ஏழைகளுக்காக இரவு, பகலாக அவர்கள் பேசியதை, செயலில் ஒப்பிடும்போது வெறும் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது என்றார் மோடி.
   அம்பேத்கருக்கு மரியாதை: முன்னதாக, மெள நகரில் அமைந்துள்ள அம்பேத்கரின் பிறப்பிடத்தில் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
   அம்பேத்கரின் பிறப்பிடத்தில் மரியாதை செலுத்திய முதலாவது பிரதமர் மோடி ஆவார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
   மெள நகரில் கடந்த 1891-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தார். அங்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
   துறைமுக வளர்ச்சி: இதற்கிடையே, இந்திய கடல்சார் வளர்ச்சி குறித்த மாநாட்டை மும்பையில் துவக்கி வைத்து மோடி பேசுகையில், துறைமுகங்களின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் கோடிக்கான முதலீடுகளை ஈர்க்க இந்தியா விரும்புவதாகத் தெரிவித்தார்.
   அவர் மேலும் கூறுகையில், நாட்டில் உள்ள துறைமுகங்களில் தற்போது கையாளப்படும் 140 கோடி டன் சரக்குகளை, 2025-ஆம் ஆண்டுக்குள் 300 கோடி டன்களாக அதிகரிக்க வேண்டும் என்பதே நமது இலக்கு என்றார்.
  கிராம வளர்ச்சியே தேசத்தின் பலம்
   தேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
   மெள நகரில், "கிராமங்களில் தன்னாட்சி' என்ற பிரசாரத்தை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியதாவது:
   கிராமங்களில் தன்னாட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அம்பேத்கர்தான். சமூக நல்லிணக்கம், நவீன தொழில்நுட்பம் ஆகியவை குறித்த ஓர் தொலைநோக்கு பார்வையை அவர் கொண்டிருந்தார். கிராம சுயராஜ்யம் என்று மகாத்மா காந்தி கண்ட கனவுக்கு இதுவரையிலும் ஒரு வடிவம் கொடுக்க இயலவில்லை. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகியும்கூட அந்த இலக்கை எட்ட முடியவில்லை.
   ஏதோவொரு 5 அல்லது 50 நகரங்களையும், தொழில்துறையையும் மேம்படுத்துவதனால் இந்தியா வளர்ச்சி அடைந்துவிடாது. நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது அவசியம் என்றார் அவர்.
   கிராமங்களில் தன்னாட்சி என்ற பிரசாரத்தின் மூலம், கிராமப்புற வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai