Enable Javscript for better performance
தமிழகத்தில் மலரும் \\\"ஜனதா முன்னணி\\\'! ஏப்ரல் 19-இல் புதிய அணி உதயம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் மலரும் "ஜனதா முன்னணி'! ஏப்ரல் 19-இல் புதிய அணி உதயம்

    Published on : 15th April 2016 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் விறுவிறுப்பாகி வரும் நிலையில், திராவிட கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் மாற்று அணியாக உருவெடுத்துள்ள தேமுதிக-மக்கள் நலக் கூட்டணிக்கு எதிராகவும் "ஜனதா முன்னணி' என்ற பெயரில் புதிய கூட்டணியை ஜனதா கட்சிகள் தொடங்கவுள்ளன.
     தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, "மாநிலத்தில் மது விலக்கை அமல்படுத்துவோம்' என்ற கோஷத்தை ஆளும் அதிமுக, திமுக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பாமக அணி உள்ளிட்டவை பிரதானமாக முன்வைத்து வருகின்றன. இந்த அணிகளுடன் சேராமல் தனி அணியாக தேர்தல் பிரசாரத்தை எதிர்கொண்டு வரும் பாஜகவும் மதுவிலக்கை கடைப்பிடிப்போம் என அறிவித்துள்ளது.
     கண்டுகொள்ளப்படாத கட்சிகள்: இந்த நிலையில், மேற்கண்ட அணிகளில் இடம் கிடைக்காமலும், தொகுதிப்பங்கீடு இழுபறியால் அந்த அணிகளில் இருந்து விலகியும் சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாட்டின் பழைமை வாய்ந்த ஜனதா கட்சியில் இருந்து காலப்போக்கில் உருவான நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் பிரதமர் தேவேகௌடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தமிழகத் தேர்தலில் தனி அணி அமைத்துக் களம் காணத் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் மாநில, மாவட்ட அளவில்கூட அமைப்புகள் உள்ளன.
     பிகாரில் இந்தக் கட்சிகள் சேர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன. இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் ஜனதா கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான களத்தை அதன் தலைவர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தமிழகத் தேர்தலையொட்டி, இந்தக் கட்சிகள் ஒன்று சேர்வது அவற்றின் இணைப்புக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது. இந்தக் கட்சிகளை திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. இருப்பினும், தேர்தலில் போட்டியிட்டே தீர வேண்டும் என்ற முடிவில் அதன் மாநிலத் தலைமைகள் உள்ளன.
     புதிய கூட்டணி ஏன்?: இது குறித்து தமிழக ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கூறுகையில், "தில்லியில் கடந்த வாரம் எங்கள் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தமிழகத் தேர்தல் கூட்டணி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், பிற அமைப்புகள் இணைந்து புதிய அணி அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்' என்றார்.
     இது பற்றி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் அருண் குமாரிடம் கேட்டதற்கு, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து "ஜனதா முன்னணி' என்ற அணியை உருவாக்கவுள்ளோம்' என்றார்.
     இந்தத் தகவலை ஆமோதித்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் கே. ஜான் மோசஸ், "ஜனதா முன்னணியால் மட்டுமே தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உண்மையாக அமைக்க முடியும். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸாலும், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸாலும் ஒரு போதும் காமராஜர் ஆட்சியை வழங்க முடியாது' என்றார்.
     தமிழக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் காஞ்சி கே. நாராயணமூர்த்தி கூறுகையில், "தமிழகத்தில் ஜனதா குடும்பத்தில் உள்ள தொண்டர்களே "உண்மையான காங்கிரஸ்' தொண்டர்கள். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் சுயநல அரசியல், குடும்ப அரசியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி மக்கள் நலன்களைப் புறக்கணித்து விட்டன. அதனால்தான் "மாற்று அணி' அவசியத்தை உணர்ந்து ஜனதா கட்சிகள் ஓரணியாகத் தேர்தலை எதிர் கொள்ளவுள்ளன' என்றார்.
     13 அமைப்புகள்: இதற்கிடையே, ஜனதா கட்சிகள் மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கோகுல மக்கள் கட்சி உள்ளிட்ட 13 அமைப்புகளும் "ஜனதா முன்னணியில்' சேர முடிவு செய்துள்ளன. இந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கை, செயல் திட்டத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
     இது பற்றி கோகுல மக்கள் கட்சியின் நிறுவனர் எம்.வி. சேகர் யாதவ் கூறுகையில், "தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 184 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியை நாங்கள் பெற்றுள்ளோம். ஜனதா முன்னணியில் 36 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கோருவோம்' என்றார்.
     ஜனதா முன்னணி: தமிழகத் தேர்தலையொட்டி மலரவுள்ள "ஜனதா முன்னணி' தொடர்பான அறிவிப்பு வரும் 19-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படவுள்ளது. இந்தக் கட்சிகள் 234 தொகுதிகளிலும் போட்டியிட கவனம் செலுத்தாமல் வெற்றி வாய்ப்பு அல்லது சமுதாய ஆதரவு கிடைக்கும் என நம்பப்படும் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளன. மேலும், தேர்தல் நெருங்கும் வேளையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை தமிழகத்துக்கு அழைத்து பிரசாரம் செய்யவும் இந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai