Enable Javscript for better performance
தலித்துகளுக்கு நன்மை செய்வதாக மோடி கூறுவது கண்துடைப்பு: மாயாவதி சாடல்- Dinamani

சுடச்சுட

    

    தலித்துகளுக்கு நன்மை செய்வதாக மோடி கூறுவது கண்துடைப்பு: மாயாவதி சாடல்

    By  லக்னெள,  |   Published on : 15th April 2016 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    15

    தலித் சமூகத்தினர் மீது அக்கறை கொண்டவராக பிரதமர் நரேந்திர மோடி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது வெறும் கண்துடைப்பாகும்; ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அவரால் எந்த நன்மையையும் செய்ய இயலாது என்று உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி குற்றம்சாடினார்.
     சட்ட மேதை அம்பேத்கரின் 125ஆவது பிறந்த தினத்தையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், லக்னெளவில் வியாழக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மாயாவதி பேசியதாவது:
     பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ தலித்துகள் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை நாட்டின் பிரதமராகவோ அல்லது ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ ஆக்க முடியும். ஆனால், அவ்வாறு அந்தப் பதவிக்கு வருபவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, தாம் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் நலனுக்காக எதையும் செய்ய இயலாது. எனவே, தலித் சமூகத்தினர் மீது அக்கறை கொண்டவராக மோடி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது வெறும் கண்துடைப்பு நாடகமாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் அவர் இவ்வாறு செயல்படுகிறார்.
     மத்தியில் காங்கிரஸ் ஆட்சி புரிந்த காலத்திலும், தலித் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்போதெல்லாம் அதனை தீவிரமான பிரச்னையாகக் கருதாத காங்கிரஸ் கட்சியின் இளவரசர் (ராகுல் காந்தி), தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை விவகாரத்தில் தலித்துகள் மீது காங்கிரஸுக்கு அக்கறை உள்ளதாக நாடகமாடுகிறார்.
     அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசால், உத்தரப் பிரதேச மாநில அரசு நிர்வாகத்தில் மலிந்துள்ள ஊழலை ஒழிக்க முடியவில்லை; சட்டம்-ஒழுங்கை கட்டிக்காக்க இயலவில்லை.
     இப்படி அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்ட சமாஜவாதி கட்சியை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மக்கள் தூக்கியெறிய வேண்டும்.
     பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆட்சியமைக்க மீண்டும் வாய்ப்பளித்தால், உத்தரப் பிரதேசத்தில் ஊழலற்ற ஆட்சி மலருவதோடு, சட்டம்-ஒழுங்கும் நிலைநாட்டப்படும் என்றார் மாயாவதி.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai