Enable Javscript for better performance
திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு

    By  நமது நிருபர்  |   Published on : 15th April 2016 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    45

    உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
     உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், தமிழுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுத்து வருபவராக அறியப்படுகிறார். அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பற்றி வட மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
     சில மாதங்களுக்கு நாடாளுமன்ற வளாக இணைப்புக் கட்டட அரங்கில் திருவள்ளுவர் புகழைப் பரப்பும் வகையில், தமிழ் அறிஞர்களுக்கு "திருவள்ளுவர் விருது' வழங்கும் விழாவையும் தருண் விஜய் நடத்தினார்.
     இந்த நிலையில், திருவள்ளுவரின் புகழை இந்தியர்களும், வெளிநாட்டினரும் உணரும் வகையில், சுற்றுலாப் பயணிகளும், யாத்ரீகர்களும் அதிகளவில் வந்து செல்லும் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க தருண் விஜய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்காக ஹரித்வார் கங்கை கரையில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
     கங்கை நதி பாய்ந்து செல்லும் கால்வாய் பகுதி உத்தரப் பிரதேச நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அங்கு இடம் ஒதுக்குவது குறித்து உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுடன் தருண் விஜய் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஹரித்வாரில் நிறுவுவதற்காக 5 அடி திருவள்ளுவர் சிலை தமிழகத்தில் தயாரானது.
     இந்த நிலையில், வள்ளுவர் சிலை வைக்கப்படும் இடம் அர்த்த கும்ப மேளா பவன் அருகே உள்ள கங்கை நதி படித்துறையை ஒட்டிய பகுதியில் தேர்வாகியுள்ளது. இந்த இடத்தை அர்த்த கும்ப மேளா அதிகாரி எஸ்.ஏ. முருகேசன், ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் ஹர்பன்ஸ் சிங் சுக், மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் எஸ். செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ் ஆகியோர் ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளனர். இதனால், விரைவில் ஹரித்வார் வரும் யாத்ரீகர்கள் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவரின் சிலையைக் காணலாம் என எதிர்பார்க்கலாம்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai