Enable Javscript for better performance
மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா? அமைச்சரவைக் குழு பரிசீலிக்க தயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா? அமைச்சரவைக் குழு பரிசீலிக்க தயக்கம்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நாம் பரிந்துரை செய்வது பொருத்தமாக இருக்குமா? என்று மத்திய அமைச்சரவைக் குழு ஆழ்ந்து சிந்தித்து வருகிறது.
     ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகள் பெருமளவில் குறையும் என தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் கருதுகின்றன.
     தேர்தல் ஆணையத்திடம் தற்போது 9.30 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. ஒரு எந்திரத்தை 15 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்ற நிலையில், இந்த எந்திரங்கள் அனைத்தும் 2019 - 2020-ஆம் நிதியாண்டில் காலாவதியாகிவிடும் எனக் கருதப்படுகிறது.
     இந்நிலையில், புதிய எந்திரங்கள் வாங்குவது குறித்தும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்தும் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.
     இந்தப் பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில், சட்டத்துறை அமைச்சர் சதானந்த கெளடா, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு முதல் முறையாக கடந்த 11-ஆம் தேதி கூடி ஆலோசனை செய்தது. அப்போது, புதிய வாக்குப்பதிவு எந்திரங்களை வாங்குவதில் செலவினங்களைக் குறைப்பது குறித்து முதலில் பரிசீலித்து முடிவு செய்ய அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்ததாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
     மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பரிந்துரை செய்ய நாம் பொருத்தமானவர்களா? என்று ஆழ்ந்த சிந்தனையோடு அமைச்சரவைக் குழு பரிசீலித்து வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
     நாடாளுமன்றக் குழு பரிந்துரை: முன்னதாக, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனை செய்தது.
     அப்போது, இந்தக் குழு எழுப்பிய கேள்விகளுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் பதில் அளிக்கையில், ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சரியானது என்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவது கடினமானது என்று கருத்து தெரிவித்தன.
     இதையடுத்து, சில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடிப்பது, சில பேரவைகளுக்கு கால நீட்டிப்பு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியப்படும் என்று அந்தக் குழு தெரிவித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai