Enable Javscript for better performance
ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை நெறிமுறைக் குழு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    ரகசிய விடியோ விவகாரம்: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை நெறிமுறைக் குழு நோட்டீஸ்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரகசிய விடியோ விவகாரத்தில், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரிடம் இதுதொடர்பாக உரிய விளக்கம் கோரி, மக்களவை நெறிமுறைக் குழு அவர்களுக்கு "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
     திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்களான சௌகதா ராய், சுல்தான் அகமது, சுவேந்து அதிகாரி, ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பிரசூன் பானர்ஜி ஆகியோர் சிலரிடமிருந்து லஞ்சம் பெறுவது போன்ற ரகசிய விடியோ காட்சிகள் கடந்த மாதம் வெளியாகின.
     தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிடப்பட்ட இந்த விடியோ காட்சிகள், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
     இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி, மக்களவை நெறிமுறைக் குழுவுக்கு, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், கடந்த மாதம் 16-ஆம் தேதி உத்தரவிட்டார்.
     இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையிலான 15 பேர் கொண்ட குழு, லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சௌகதா ராய் உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரிடம், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
     "மேற்கு வங்க தேர்தல் பிரசாரப் பயணத்தில் உள்ள எனக்கு, மக்களவை நெறிமுறைக் குழுவின் நோட்டீஸ் கிடைக்கப் பெற்றதும் அதற்கு உரிய பதில் அளிப்பேன்' என்று சுல்தான் அகமது தெரிவித்தார்.
     நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றதாக சில எம்.பி.க்கள் மீது, கடந்த 2005ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டது.
     அதுதொடர்பாக விசாரித்த நாடாளுமன்றக் குழு, நெறிமுறைக் குழு ஆகியவை அளித்த அறிக்கையின்படி, மக்களவை எம்.பி.க்கள் 10 பேர் மற்றும் மாநிலங்களவை எம்.பி. ஒருவரின் பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai