Enable Javscript for better performance
ஹரித்வார் அர்த்த கும்ப மேளா: 2.50 கோடி பேர் புனித நீராடல்- Dinamani

சுடச்சுட

    

    ஹரித்வார் அர்த்த கும்ப மேளா: 2.50 கோடி பேர் புனித நீராடல்

    By நமது நிருபர்  |   Published on : 15th April 2016 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    3

    உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் "அர்த்த கும்ப மேளா' இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை சுமார் 2.50 கோடி பக்தர்கள் நீராடியுள்ளதாக விழாக் குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
     12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பூரண கும்ப மேளா போன்று, ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்ப மேளா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு ஹரித்வாரில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதன் 8ஆவது நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நள்ளிரவு முதல் மாலை வரை பக்தர்கள் கங்கையின் பல்வேறு படித்துறைகளிலும் புனித நீராடினர். முக்கிய படித்துறைகள் அமைந்துள்ள ஹர்கி பேடி, பிரம்ம குண்ட் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். 9ஆவது நிகழ்வு வெள்ளிக்கிழமையும் (ஏப்ரல் 15) 10ஆவது நிகழ்வு ஏப்ரல் 22ஆம் தேதியும் நடைபெறுகிறது. அத்துடன் அர்த்த கும்ப மேளா நிறைவு பெறும்.
     வரும் 22ஆம் தேதி நடைபெறும் கும்ப மேளா நிகழ்வில் உத்தரகண்ட் மாநிலத்தில் சிறு மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோயில்களைச் சேர்ந்த சுமார் 700 பூசாரிகள் சுவாமியை, சூலாயுதத்தை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்துவந்து ஹரித்வார் கங்கையில் நீராடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கங்கை ஆரத்தியைக் காண அதிகளவில் பக்தர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
     போதுமான குளியல், தங்குமிடம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் எவ்வித நெரிசல், இடையூறுகள் இல்லாமல் நீராடி வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஹரித்வார் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் ஆவுடை கிருஸ்ணராஜ் மேற்பார்வையில் மாநில போலீஸார் செய்து வருகின்றனர். தவிர, மத்திய துணை ராணுவத்தினரும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
     இதற்கிடையே, அர்த்த கும்ப மேளா தொடங்கிய ஜனவரி 14ஆம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை சுமார் 2.50 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடியுள்ளனர் என்று அர்த்த கும்ப மேளாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஏ. முருகேசன் தெரிவித்தார்.
     அவர் மேலும் கூறுகையில், "ஏப்ரல் 22ஆம் தேதியுடன் கும்ப மேளா நிகழ்வு முடிவடைவதால் மொத்தம் 3 கோடி பக்தர்கள் வரை புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அதிகளவில் நீராடும் பகுதிகளில் குடிநீர், நடமாடும் கழிப்பறை, தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணி உடனுக்குடன் மேற்கொள்ளப்படுவதால் பக்தர்கள் எவ்வித அசௌகரியம் இல்லாமல் நீராடி வருகின்றனர்' என்றார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai