காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை தில்லி பெருநகர நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது.
காசோலை மோசடி வழக்கு: மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை தில்லி பெருநகர நீதிமன்றம் சனிக்கிழமை பிறப்பித்தது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி சுமித் ஆனந்த், வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி மல்லையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டார்.

பிரிட்டனில் உள்ள மல்லையாவிடம் அந்தப் பிடி ஆணையை சேர்ப்பிக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சகத்தை அவர் அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே பிடி ஆணை உத்தரவு பிறப்பித்தும் மல்லையா நேரில் ஆஜராகாததைக் குறிப்பிட்ட நீதிபதி, அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (கே.எஃப்.ஏ.), தில்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு (டி.ஐ.ஏ.எல்.) கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.1 கோடிக்கான காசோலை

அளித்தது.

டி.ஐ.ஏ.எல். நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வரும் தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சேவைகளுக்காக அந்தக் காசோலை அளிக்கப்பட்டது.

எனினும், கே.எஃப்.ஏ. வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்தக் காசோலை திருப்பி அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக கே.எஃப்.ஏ. நிறுவனம் மீது டி.ஐ.ஏ.எல். தொடுத்துள்ள வழக்கு தொடர்பாகவே விஜய் மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை தில்லி பெருநகர நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கே.எஃப்.ஏ. நிறுவனத்தின் மொத்தம் ரூ.7.5 கோடி ரூபாய்க்கான 4 காசோலைகள் திருப்பியனுப்பப்பட்டதாக டி.ஐ.ஏ.எஸ். நிறுவனம் தனித்தனியாக வழக்கு தொடுத்துள்ளது.

இதுதவிர, 17 அரசு வங்கிகளில் வாங்கிய ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விஜய் மல்லையாவுக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக மும்பை சிறப்பு நீதிமன்றம், மல்லையாவுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணையை கடந்த மாதம் பிறப்பித்தது.

எனினும், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்து விட்டார்.

கடந்த மார்ச் மாதம் நாட்டை விட்டு வெளியேறிய மல்லையா, தற்போது பிரிட்டனில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com