காவிரி விவகாரம்: அவசர வழக்காக செப். 2ஆம் தேதி விசாரிக்க முடிவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நிகழ் நீர்ப் பருவ ஆண்டில் 50.052 டி.எம்.சி. நிலுவை நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி செப்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நிகழ் நீர்ப் பருவ ஆண்டில் 50.052 டி.எம்.சி. நிலுவை நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி செப்டம்பர் 2ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
சம்பா சாகுபடி பயிரைப் பாதுகாக்க காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நிகழ் நீர் பருவ ஆண்டின் (2016-17) ஆகஸ்ட் 19-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்துக்குத் 50.052 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தர வேண்டும். அதை பிலிகுண்டுலு நீர் அளவை நிலையத்தில் கணக்கிட்டு திறந்துவிட வேண்டும். அதில் முதல் கட்டமாக 25 டி.எம்.சி. நீரை 10 நாள்களுக்குள்ளும், அடுத்த 25 டி.எம்.சி. நீரை வரும் செப்டம்பர் 3-ஆவது வாரத்துக்குள்ளும் திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மனு தாக்கல் செய்திருந்தது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்டே வெள்ளிக்கிழமை ஆஜரானார். காவிரி விவகாரத்தில் நிலுவை நீரை கர்நாடகம் திறந்து விடாததால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழகத்தின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று சேகர் நாப்டே கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், "தமிழக மனுவை அவசரகால வழக்காகக் கருதி அடுத்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டார்.
இழப்பீடு வழக்கு: இதேபோல, காவிரி நீரை உரிய காலத்தில் திறந்து விடாததால், தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பீடான சுமார் ரூ.2,500 கோடியை வழங்க கர்நாடகத்துக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கெளடா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், கர்நாடகம் ஆகியவை சார்பில் முன்வைக்கப்படும் விவாதங்களின் முக்கிய அம்சங்கள் அடங்கிய பட்டியலை இரு மாநில அரசுகளின் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து, "இரு அரசுத் தரப்புகளும் பரஸ்பரம் முக்கிய அம்சங்கள் மீதான நிலைப்பாட்டை விளக்கி மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டு அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சட்டப்படி எதிர்கொள்வோம்: சித்தராமையா திட்டவட்டம்
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு பற்றி சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்வோம். கர்நாடக அரசுத் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com