சுடச்சுட

    

    மால்டாவில் ஏற்பட்டது மதக் கலவரம் அல்ல:மம்தா பானர்ஜி

    By கொல்கத்தா  |   Published on : 10th January 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mamta

    மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நடைபெற்ற வன்முறை என்பது உள்ளூர் பிரச்னையே தவிர மதக் கலவரம் அல்ல என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

    இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாகக் கூறி அகில பாரதிய ஹிந்து மகா சபையின் தலைவர் கமலேஷ் திவாரிக்கு எதிராக மால்டா மாவட்டத்தின் கலியாசக் பகுதியில் முஸ்லிம் அமைப்பினர் அண்மையில் பேரணி நடத்தினர்.

    அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில் காவல் நிலையம் மற்றும் ஏராளமான வாகனங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இது திட்டமிடப்பட்ட மத வன்முறை என விஹெச்பி உள்ளிட்ட ஹிந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை கலந்துகொண்டார்.

    மாநாட்டுக்கு முன்பும், அதற்குப் பிறகும் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறியதாவது:

    மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் முற்றிலும் மாறுபட்ட கோணம் கொண்டதாகும். அங்கு நிகழ்ந்த மோதல் என்பது எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே நடைபெற்றதாகும்.

    இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ அல்லது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை. எனினும், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.

    மேற்கு வங்க மாநிலத்தில் அமைதி நிலவுகிறது. இங்கு மதவாத வன்முறைகளுக்கு இடமில்லை என்றார் அவர்.

    மத்திய அமைச்சர்கள் பலர் உங்களைப் பாராட்டி பேசுகின்றனரே? என்ற கேள்விக்கு மம்தா அளித்த பதில்:

    நான் எப்போதும் கூட்டாட்சிக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மத்திய அரசு என்பது தாய் போன்றது. மாநில அரசுகள் பிள்ளைகள் போன்றவை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நீடித்தால் கூட்டாட்சி அமைப்பு வலுவடையும்.

    ஜிஎஸ்டி மசோதா எங்களது எண்ணங்களைப் பிரதிபலிப்பதால் அதை ஆதரிக்கிறோம். ஆனால், நிலம் கையக சட்ட மசோதா குறித்து எங்களுக்கு சில ஆட்சேபனைகள் உள்ளன என்றார் மம்தா.

    ஊடுருவிய வங்கதேசத்தவர் 8 பேர் கைது

    அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்துக்குள் ஊடுருவிய 8 நபர்கள் உள்பட 9 பேரை எல்லையோரக் காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

    இந்தியாவில் வேலை வாங்கித் தருகிறோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் எல்லை தாண்டி நுழைந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட மற்றொரு நபர், அவர்களுக்கு உதவிகரமாக இருந்த இந்தியர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai