சுடச்சுட

  

  இந்தியாவில் கைதான 16 பேருக்கும் ஐஎஸ் அமைப்பின் தலைமையுடன் தொடர்பு: விசாரணையில் தகவல்

  By  புது தில்லி,  |   Published on : 25th January 2016 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட 16 ஐஎஸ் ஆதரவாளர்கள், இராக், சிரியா நாடுகளில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைமையுடன் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
   மகாராஷ்டிரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் திடீர் சோதனை நடத்தினர். இதில், முத்தாப்பீர் முஷ்டாக் ஷேக் தலைமையில் "ஜனூத்-உல்-கலீபா-இ-ஹிந்த்' என்ற புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
   அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதிக்கு மிகவும் நெருக்கமான ஒருவருடன் ஷேக் நீண்டகாலம் தொடர்பில் இருந்ததும், பாக்தாதியின் ஆலோசனையின் பேரில் இந்தியாவில் புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
   இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு துருக்கி, சிரியா வழியாக ஷேக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
   நீதிமன்றத்தில் ஆஜர்: இதனிடையே, உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட புதிய பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக செயல்பட்ட ரிஸ்வான் அலி, மும்பை நீதிமன்றத்தில் மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, அவரை வரும் 30ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
   இதேபோல், தில்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் மேலும் 2 பேர் என்ஐஏ அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டு, 13 நாள்கள் காவலில் எடுக்கப்பட்டனர்.
   குஜராத்தில் ஒருவர் கைது: இந்நிலையில், குஜராத் கலவரத்துக்குப் பழிவாங்கும் வகையில் பாஜக தலைவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டி, அப்ரார் பதான் என்பவரை அந்த மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
  94 இணையதளங்கள் முடக்கம்
   இந்திய இளைஞர்களிடம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு குறித்து பிரசாரம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 94 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
   இந்த தகவலை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை தலைவர் விவேக் பன்சால்கர் தெரிவித்தார்.
   இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மகாராஷ்டிரம் தவிர்த்து, மேலும் 10 முதல் 12 மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது' என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai