
ரயில் தண்டவாளங்களில் குப்பைகளை வீசியெறிவோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு மத்திய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வழக்குரைஞர்கள் சலோனி சிங்கும், ஆருஷ் பதானியும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதில் "ரயில்வே நிர்வாகத்தினர் தங்கள் சட்டப்பூர்வ கடமையைச் செய்யத் தவறி விட்டனர். ரயில்வே சொத்துகளில், குறிப்பாக தண்டவாளங்களில் மாசுபாடு ஏற்படுவதற்கு அவர்கள்தான் மறைமுக காரணமாகத் திகழ்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு இது குறித்து பதிலளிக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த மனு, முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ரயில்வே தண்டவாளங்களில் மனிதக் கழிவுகளும், இதர குப்பைக் கூளங்களும் கொட்டிக் கிடப்பது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்தது. ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு விரைவில் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டது.
மேலும், தலைநகர் தில்லியையொட்டி அமைந்துள்ள அனைத்து தண்டவாளங்களும் முற்றிலும் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவிட்டதோடு, தில்லி ரயில் நிலையத்தில் தண்டவாளங்களையும் நடைமேடைகளையும் சுத்தமாக வைத்திருக்கத் தவறியதற்காக ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது. தவிர, தண்டவாளங்களில் மலம் கழிப்போர், குப்பைகளை வீசியெறிவோர் ஆகியோருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்குமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்குரைஞர்கள் சலோனி சிங் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ரயில் தண்டவாளங்களுக்கு அருகிலேயே குடிசைப்பகுதிகளும், கட்டடங்களும் உள்ளன. அவற்றில் வசிப்பவர்கள் தண்டவாளங்களில் குப்பைகளை வீசி எறிவதை நீங்கள் ஏன் அனுமதிக்கிறீர்கள்? அவர்களை உங்களால் ஏன் தடுக்க முடியவில்லை?
அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படுவதை நீங்கள் கண்டிப்புடன் நிறைவேற்றினால் அவர்கள் தண்டவாளங்களில் குப்பைளை கொட்டத் துணிய மாட்டார்கள். எனவே, இந்த அபராத விதிப்பை கண்டிப்புடன் நிறைவேற்றுங்கள் என்று பசுமைத் தீர்ப்பாய அமர்வு உத்தரவிட்டது.