
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனக்கு ஆசானைப் போன்றவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் முதல் குடிமகனாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைப் போற்றும் வகையில் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இரண்டாவது அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை திங்கள்கிழமை திறந்து வைத்துப் பார்வையிட்ட பிரதமர் மோடி, குடியரசுத் தலைவரைப் பாராட்டி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக நான் பொறுப்பேற்றபோது தில்லி எனக்கு புதிய உலகமாகத் தோன்றியது. இந்தச் சூழல் முற்றிலும் நான் கண்டிராத ஒன்று. அப்போது பல்வேறு விவகாரங்களில் எனக்கு ஆசானாக இருந்து வழிகாட்டியவர் பிரணாப் முகர்ஜி.
எனது அரசியல் பின்புலமும், அவரது அரசியல் பின்னணியும் மாறுபட்டவை. இருந்தபோதிலும், நாங்கள் இருவரும் தோளோடு தோள் நின்று ஜனநாயகத்தில் செயல்படுவதாக ஒவ்வொரு தருணத்திலும் உணர்கிறோம். மாற்றுக் கட்சி அரசு ஆட்சியில் இருந்தாலும், அதன் திட்டங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரின் திட்டமாகப் பாவித்துச் செயல்படுத்துவது அரிது. அத்தகைய பெருந்தன்மை பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே உண்டு என்றார் பிரதமர் மோடி.