சுடச்சுட

  

  சாத்வி பிராச்சியின் சர்ச்சைப் பேச்சு: காஷ்மீர் மேலவையில் 2-ஆவது நாளாக அமளி

  By dn  |   Published on : 10th June 2016 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ""முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம்'' என்று கூறிய வி.ஹெச்.பி. தலைவர் சாத்வி பிராச்சியின் கருத்தால், ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் அமளி ஏற்பட்டது.

  ஜம்மு-காஷ்மீர் சட்டமேலவை வியாழக்கிழமை காலை கூடியதும், சாத்வி பிராச்சியின் கருத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  அப்போது, ""இந்த விவகாரம் தொடர்பாக, அரசுத் தரப்பில் இருந்து புதன்கிழமையே பதில் அளிக்கப்பட்டுவிட்டது'' என்று கூறிய மேலவைத் தலைவர் அனாயத் அலி, உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயன்றார்.

  அதைத் தொடர்ந்து, சாத்வி பிராச்சிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எதிராக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். பதிலுக்கு, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

  அப்போது, ""இந்த விவகாரம் தொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் நயீம் அக்தரும், அவைத் தலைவரும் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டதால், அதை மீண்டும் எழுப்பத் தேவையில்லை'' என்று மாநில சட்ட அமைச்சர் அப்துல் ஹக் கூறினார்.

  ""சாத்வி பிராச்சியின் கருத்தை மாநில அரசு கண்டிக்கும்பட்சத்தில், எதிர்க்கட்சி சார்பில் கண்டனத் தீர்மானம் கொண்டுவர அனுமதிக்க வேண்டும்'' என்று குலாம் நபி மோங்கா கூறினார்.

  சட்டப்பேரவை விதிகளுக்கு உள்பட்டு கோரிக்கையை பரிசீலிப்பதாக அவைத் தலைவர் உறுதியளித்தும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.

  இதேபோல், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையிலும் சாத்வி பிராச்சியின் கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். ""சாத்வி பிராச்சியின் கருத்துக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்று சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் கேள்வி எழுப்பினார். அப்போது, ""சாத்வி பிராச்சியின் கருத்து சரியல்ல'' என்று துணை முதல்வர் நிர்மல் சிங் (பாஜக) கூறினார். எனினும், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க நிர்மல் சிங் உடன்படவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai