Enable Javscript for better performance
ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு காஷ்மீரில் ராணுவக் குடியிருப்புக்கு நிலம் ஒதுக்கவில்லை: மெஹபூபா

    By  ஸ்ரீநகர்,  |   Published on : 10th May 2016 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    31

    ஜம்மு-காஷ்மீரில் போரில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கான குடியிருப்பு (சைனிக் காலனி) கட்டுவதற்கு மாநில அரசு இதுவரை நிலம் ஒதுக்கவில்லை என்று அந்த மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி கூறினார்.
     ஜம்மு-காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஒருமுறை தலைநகர் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி, கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தின் மறுதிறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் மெஹபூபா முஃப்தி கூறியதாவது:
     சைனிக் காலனி கட்ட வேண்டும் என்பது இந்த மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீர்கள் யாரும் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. எனினும், சைனிக் காலனிக்காக இதுவரை நிலம் ஒதுக்கப்படவில்லை.
     அந்தக் காலனிக்கு நிலம் ஒதுக்குவதற்கான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டதாக, முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஒமர் அப்துல்லா காட்டும் ஆதாரங்கள் போலியானவை.
     இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளது. அதற்கு எதிராக, நானோ அல்லது பிரதமரோ எந்த முடிவும் எடுத்துவிட முடியாது என்பதை உமர் அப்துல்லா நன்கு அறிவார் என்றார் மெஹபூபா முஃப்தி.
     இதனிடையே, ""சமூக வலைதளங்களில் நான் வெளியிட்டுள்ள ஆவணங்கள் போலியானவை என்றால், என் மீது மெஹபூபா முஃப்தி வழக்கு தொடுக்கட்டும்'' என்று ஒமர் அப்துல்லா கூறினார்.
     ""என் மீது மெஹபூபா வழக்கு தொடுக்கவில்லை என்றால், பொய் சொல்வது யார் என்று மக்கள் அறிந்து கொள்வார்கள்'' என்றும் அவர் கூறினார்.
     காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: இந்நிலையில், ஜம்முவில் சைனிக் காலனி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறிக்கும் மாநில அரசின் எந்தத் திட்டத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்காது என்று அவர்கள் தெரிவித்தனர்.
     பாஜக விளக்கம்: இதனிடையே, மக்களை முட்டாளாக்குவதற்காக, சைனிக் காலனி விவகாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சியினரும், பிரிவினைவாதிகளும்தான் எழுப்புகின்றனர் என்று பாஜக எம்எல்ஏ ரவீந்தர் ரெய்னா கூறினார்.
     ""இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம். இங்கு வருவதற்கும், தங்குவதற்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உள்ளது. ஒமர் அப்துல்லாவுக்கு தில்லியிலும், வேறு பகுதியிலும் சொந்தமாக சொத்துகள் இருக்கும்போது, போரில் உயிர் நீத்த வீரர்களின் பிள்ளைகள் ஜம்மு-காஷ்மீரில் ஏன் வசிக்கக் கூடாது? இதுதொடர்பாக, பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதவுள்ளேன்'' என்றார் ரவீந்தர் ரெய்னா.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai