Enable Javscript for better performance
இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் கப்பல்களை அனுப்பிவைத்தது இந்தியா- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் கப்பல்களை அனுப்பிவைத்தது இந்தியா

    By  கொச்சி,  |   Published on : 21st May 2016 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புயல், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரணப் பொருள்களுடன் 2 கப்பல்களையும், பேரிடர் மீட்புக் குழுவுடன் "சி-17' ரக ஹெலிகாப்டரையும் இந்திய அரசு அனுப்பியுள்ளது.
     இதுதொடர்பாக, இந்தியக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     இந்தியக் கடற்படையைச் சேர்ந்த "ஐஎன்எஸ் சுனன்யா' என்ற கடலோர ரோந்துக் கப்பலும், "ஐஎன்எஸ் சட்லஜ்' என்ற மேற்பார்வைக் கப்பலும் நிவாரணப் பொருள்களுடன் கொச்சியில் இருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றார் அவர்.
     இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     இலங்கைக்கு மீட்புப் படகுகள், பம்பு செட்டுகள், உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், கூடாரங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள், ஏற்கெனவே கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்டன.
     மேலும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினருடன் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள், "சி-17' ரக ஹெலிகாப்டரில் இலங்கைக்குப் புறப்பட்டுள்ளனர். அந்த ஹெலிகாப்டரில் மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள், நடமாடும் கழிப்பறைகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
     மிகவும் அருகில் உள்ள நட்பு நாடான இலங்கைக்கு ஆபத்துக் காலங்களில், இந்தியா எப்போதும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதற்கு முன்பு சுனாமியால் பாதிக்கப்பட்டபோதும் இலங்கைக்கு இந்திய அரசு உதவி செய்தது என்றார் அவர்.
     இலங்கையில் வீசிய புயல் காற்றால் கடலோரப் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரண்யகே, புலாத்கோகுபிட்டியா ஆகிய பகுதிகளில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் உயிரிழந்துவிட்டனர். 134 பேர் காணாமல் போய்விட்டனர். 354 வீடுகள் சேதமடைந்துள்ளன. 3 லட்சத்துத்துக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai