Enable Javscript for better performance
கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம்- Dinamani

சுடச்சுட

    

    கோயிலுக்கு தலித்துகளை அழைத்து சென்ற தருண் விஜய் மீது தாக்குதல்: உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பவம்

    By  நமது நிருபர்  |   Published on : 21st May 2016 03:21 AM  |   அ+அ அ-   |    |  

    49

    உத்தரகண்ட் மாநிலம், சக்ரதா பகுதியில் உள்ள கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுடன் நுழைய முயன்ற மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் மீது ஒரு கும்பல் கற்களை வீசி கடுமையாகத் தாக்கியது.
     இதில் தலை, கழுத்துப் பகுதியில் ரத்தக் காயங்களுக்கு ஆளான தருண் விஜய், போலீஸ் தலையீட்டின் பேரில் மீட்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
     டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் புனா கிராமம் உள்ளது. அங்குள்ள சில்குர் தேவதா கோயிலில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதேபோல, ஜவுன்சார் - பாபார் பகுதியில் 349 கோயில்களில் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
     இதை அறிந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், அந்தக் கோயில்களுக்கு
     தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தார்.
     அதன்படி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் சில தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் சில்குர் தேவதா கோயிலுக்குச் சென்று தருண் விஜய் வழிபட்டார். பின்னர் வெளியே வந்த தருண் விஜய் மீதும் அவருடன் வந்த குழுவினர் மீதும் ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
     இந்தச் சம்பவம் குறித்து உத்தரகண்ட் மாநில காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஒரு பிரிவு சமுதாயத்தினருடன் கோயிலுக்குள் தருண் விஜய் சென்றது பற்றி கோயில்
     அருகே பந்தல் அமைத்து "பண்டாரா' (உணவு வழங்கும் நிகழ்ச்சி) நடத்திய கோயில் நிர்வாகிகளுக்குத் தெரிய வந்தது.
     இதை அறிந்து கோயில் வாயில் எதிரே முற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். அப்போது வெளியே வந்த தருண் விஜய்யிடம் "தாழ்த்தப்பட்டோருடன் கோயிலுக்கு எவ்வாறு செல்லலாம்?' என்று ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
     அதைத் தொடர்ந்து அவர் மீதும் குழுவினர் மீதும் அந்தக் கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கோயிலுக்கு வெளியே இருந்த தருண் விஜய்யின் கார் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.
     இது பற்றி தகவலறிந்ததும் உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் பகுதிக்குச் சென்று தருண் விஜய்யை மீட்டனர். அவரது தலை, கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.
     உடனடியாக அவரையும் மற்றவர்களையும் டேராடூனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி கிடைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர் என்றார் உயரதிகாரி.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai