தோல்விகள் நிரந்தரமல்ல: சோனியா

அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில்
தோல்விகள் நிரந்தரமல்ல: சோனியா

தோல்விகள் நிரந்தரமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
 அஸ்ஸாம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 25-ஆவது நினைவு தினம் தில்லியில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விகளால் துவண்டு போயுள்ள கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக சோனியா காந்தி பேசியதாவது:
 கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு பெறும் வெற்றி நீண்ட காலத்துக்கு நிலைக்காது. ஆனால் கொள்கைகளைப் பின்தொடர்ந்தோமேயானால் எந்த ஒரு தோல்வியும் நிரந்தரமாகாது.
 சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தல், மேம்படுத்துதல் மூலம், ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் சிந்திய ஒவ்வொரு ரத்தத் துளிக்கும் நாம் ஈடு செய்ய வேண்டியுள்ளது.
 ராஜீவ் காந்தியின் கொள்கைகளான எளிமை, நவீனம், நல்லிணக்கம் மற்றும் மற்றவர்களின் தேவையைப் புரிந்து கொண்டு உதவுதல் ஆகியவற்றை நாம் பின்பற்ற வேண்டும். அதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
 மேற்கண்ட கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே நம்முள் ராஜீவ் காந்தி வாழ்கிறார் எனக் கூற முடியும். இளைஞர்களுக்கு வாக்குரிமை அளித்தது, உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தது, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தியது உள்ளிட்ட அளப்பரிய பங்களிப்புகளை அவர் இந்த நாட்டுக்கு ஆற்றியுள்ளார்.
 உலக அளவில் இந்தியா தலை நிமிர்ந்து பெருமிதத்துடன் நடை போடுகிறது என்றால், அதற்கு ராஜீவ் காந்தி மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம்.
 அஸ்ஸாம், மிúஸாரம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் அமைதி நிலவ வலுவான நடவடிக்கைகளை அவர் எடுத்தார்.
 உலக நாடுகளிடையே இந்தியா அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பெற்று முதன்மை நாடாகத் திகழ வேண்டும் என்பதே அவரது லட்சியக் கனவு என்றார் சோனியா காந்தி.
 இளைஞர் காங்கிரஸார் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே. அந்தோணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com