
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதென்று மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் "இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ரோஹன் இம்தியாஸ், முகநூலில் வெளியிட்ட பதிவில் ஜாகிர் நாயக்கின் உரை தனக்கு ஊக்கமளித்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய ஜாகிர் நாயக், அதன்பிறகு மீண்டும் திரும்பி வரவில்லை. வெளிநாட்டிலேயே தங்கிவிட்டார்.
இதனிடையே, ஜாகிர் நாயக்கின் "இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' அமைப்பால் நடத்தப்படும் "பீஸ் டிவி' தொலைக்காட்சி வாயிலாக பயங்கரவாத பிரசாரம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் தீவிரமாக விசாரணை நடத்தியது. இந்நிலையில், ஜாகிர் நாயக்கின் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பது தொடர்பான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.
முன்னதாக, முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்கு தூண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் ஜாகிர் நாயக்குக்கு எதிராக மகாராஷ்டிர மாநில போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்தனர். இதேபோல், ஜாகிர் நாயக்கால் நடத்தப்படும் கல்வி தொடர்பான அறக்கட்டளைக்கு, வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. பிரிட்டன், கனடா, மலேசியா ஆகிய நாடுகளில், ஜாகிர் நாயக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...